"தமிழ் நடிகர்களை வைத்து `ஹாலிவுட்' படம் தயாரிப்போம்'' என்று சாய்மீரா நிறுவனம் அறிவித்துள்ளது.
சாய்மீரா நிறுவன தலைவர் பிரமிட் நடராஜன், நிர்வாக இயக்குனர் பி.எஸ்.சாமிநாதன், இயக்குனர் நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரையுலக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் திருட்டு வி.சி.டி. பிரச்சினையை ஒழிக்க அதிநவீன தொழில் உத்தியான டிஜிட்டல் சினிமாவை முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள், பிரமிட் சாய்மீரா நிறுவனத்தினர்தான். படங்கள் தயாரிப்பு, வினியோகம், திரையிடுதல் ஆகிய மூன்று துறைகளுடன் இந்த நிறுவனம் இயங்குகிறது.
அடுத்து 'ஹாலிவுட்' படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதில், தமிழ் நடிகர்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மூன்றெழுத்து முன்னணி கதாநாயகர்கள் அதில் நடிப்பார்கள். சின்னத்திரையிலும் தொடர்கள் தயாரிக்கிறோம். கலைஞர் தொலைக்காட்சியில் 'ரேகா ஐ.பி.எஸ்.', ஆபாவாணனின் 'திருமகள்', சிறுவர்கள் ரசித்துப் பார்க்க 'மழலைப்பட்டாளம்' போன்ற தொடர்களை தயாரித்து வருகிறோம்.
புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 'கதை வங்கி' ஒன்றை தொடங்கி இருக்கிறோம். இதில் தங்கள் கதையை பதிவு செய்துகொண்டால், நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் படங்களை இயக்க, அந்த படங்களின் இயக்குனர்களை அழைப்போம். இந்திய மண்டல மொழிகளிலும் தொடர்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். சாய்மீரா நிறுவனத்தால் சிறு தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தில் உண்மை இல்லை. எப்போதும் அவர்களுக்கு பாதுகாப்பாகவே இருப்போம் என்று அவர்கள் கூறினர்.