தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கியதோடு, அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதா தூக்கி எறிந்துவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமாக நடந்து கொண்ட காரணத்திற்காக அவர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளால், கட்சியினர் பீதியில் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அதே ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி 5வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது தமிழக அமைச்சரவை 6வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன், 1991-1996 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். 2001-2006ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.
ஆனால் 2011 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த அ.தி.மு.க. அரசில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார் செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரியும், அவரது மகன் கதிரீஸ்வரனும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக புகார் கூறியதாகவும், அதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, செங்கோட்டையனை கடுமையாக எச்சரித்ததாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்பட்டது.
அந்த புகாருக்கு தொடர்ந்து இடமளிக்கும் வகையில் அவர் செயல்பட்டதாலும், மேற்கு மண்டல பகுதியில் அ.தி.மு.க.வினர் அவர் மீது அதிருப்தியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. பதவி பறிப்பு குறித்து செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது வந்த புகார்கள் போல் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீதும் வருகிறது. தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.
இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்திலேயே அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதுடன், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார்.