எதிர்பாக்கலைல.. ஜெயிப்பேன்னு எதிர்பாக்கலைல..! – மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (08:25 IST)
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் வெற்றியை கொடுத்துள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடந்தன. இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

இரண்டு அணிகளுக்குமே இது ஐந்தாவது லீக் போட்டி முன்னர் நான்கு போட்டிகளில் ராஜஸ்தான் 3 வெற்றிகளும், குஜராத் டைட்டன்ஸ் 3 வெற்றிகளும் பெற்று சமநிலையில் இருந்தன. இதனால் இந்த போட்டி இருவருக்கும் தரவரிசை பட்டியலில் டாப்பை தொடுவதற்கான போட்டியாகவே இருந்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் தனது பவுலிங் பலத்தைக் கொண்டு முதலில் குஜராத்தை மடக்கிவிட்டு பின்னர் சேஸ் செய்வதாக திட்டம். அதன்படியே முதல் விக்கெட்டாக வ்ரித்திமான் சாகாவை தூக்கினார்கள். ஆனால் அதற்கு ஒரு கேட்ச் பிடிப்பதற்குள் முட்டி மோதிக் கொண்டார்கள். ஆனால் சுப்மன் கில் நின்று ஆடி சிக்ஸ், பவுண்டரிகள் கொடுத்து வலு காட்டினார். அடுத்தடுத்து வந்த சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யாவை குறைந்த ரன்னில் வெளியேற்றினாலும் டேவிட் மில்லர் இறங்கி ஆடி 46 ரன்களை குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது.



இதெல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஊதி தள்ளும் டார்கெட்தான் என ராஜஸ்தான் ரசிகர்களே அசால்ட்டாக இருந்த போது ராஜஸ்தான் வீரர்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே அடித்து அவுட் ஆனார். ஷமி வீசிய 5 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காத நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் டக் அவுட் ஆனார். முகமது ஷமியின் பந்தில் ஸ்டம்ப் தெரித்தபோது ராஜஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையும் தெரித்தது.

தேவ்தத் படிக்கல் ஓரளவு 25 பந்துகளுக்கு 26 ரன்கள் என்ற சுமாரான ஆட்டத்தையே கொடுத்தார். 178 டார்கெட் இருக்கையில் 10 ஓவர்கள் முடியும் வரை ராஜஸ்தான் எடுத்திருந்த மொத்த ரன்களே 55 மட்டும்தான். 4 விக்கெட்டுகளும் காலி. இது ராஜஸ்தானுக்கு தோல்வி மேட்ச்தான் என தோன்றியது.



அப்போதுதான் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். 6 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட சஞ்சு 32 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். கூட வந்த ஹெட்மயரும் சும்மா இல்லாமல் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடித்து ரசிகர்கள் பார்வைக்கு விருந்து படைத்ததுடன் அவுட் ஆகாமல் நின்று விளையாடி 26 பந்துகளுக்கு 56 ரன்களை குவித்து 179 ரன்களை எட்டி 20வது ஓவர் முடிவதற்குள் அணியை வெற்றி பெற செய்தார். அதுவும் கடைசியில் அடித்த அந்த ஃபினிஷிங் சிக்ஸர் ஹெட்மயரை நேற்றைய ஆட்டநாயகனாகவே ஆக்கிவிட்டது. முதல் பாதியில் தோற்று விடும் என நினைத்த ராஜஸ்தான் அணி அடுத்த பாதியில் சூரசம்ஹாரம் செய்து “எதிர்பாக்கலைல.. ஜெயிப்பேன்னு எதிர்பாக்கலைல” என சிங்கம் சூர்யாவாய் கர்ஜித்து ரசிகர்களை ஆனந்த தாண்டவமாட செய்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்