போரை நிறுத்துவதற்கு தற்போது வரை எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த் பேச்சுவார்த்தையின் போது, யுக்ரேனின் மேரியோபோல் நகரின் மீதான முற்றுகை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு ரஷ்யா வெற்றியை அறிவித்த போதிலும், ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டல் உலோகத் தொழிற்சாலையை கைப்பற்றமுடியவில்லை. அசோவ்ஸ்டலில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்க உத்தரவாதம் தர குட்டரஸிடம் யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.
யுக்ரேன் அமைதி முயற்சிகளை கெடுத்து வருவதாகவும், இதனால், மூன்றாம் உலகப் போர் அபாயம் "தீவிரமாக" உள்ளது என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் எச்சரித்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.