தமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் - எச்சரிக்கும் உளவுப் பிரிவு

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (18:25 IST)
ஆகஸ்ட் 2019தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளை தாக்க பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கோவை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பு ஒன்றில் கடைசியாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை கோவையில் பயங்கரவாதிகள் இருந்தது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு ஏ.ஐ.ஜி சிஷிர் குமார் குப்தா, விமான நிலைய பாதுகாப்புக்கான உதவி டிஜிபி மற்றும் அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்புக்கான ஐ.ஜி ஆகியோருக்கு ஆகஸ்டு 22அம தேதி எழுதியுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அனைவரும் இந்துக்களின் தோற்றத்தில், நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று கருதப்படும், லஷ்கர் இ தய்பாவை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்பவர் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.
 
எந்தேந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்?
பயங்கரவாதிகள் இலக்கு வைத்திருக்கும் இடங்களும் உளவுப் பிரிவின் கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
வேளாங்கண்ணி மாதா கோவில், நாகப்பட்டினம்
மத்திய பாதுபாப்பு பயிற்சி மையம், வெலிங்க்டன், ஊட்டி
சூலூர் விமானப் படைத் தளம், கோவை
சபரிமலை, கேரளா
மேலும், வகுப்புவாதம் அதிகம் நடைபெறலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களையும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 
எந்த முறையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற விவரம் இல்லை.
 
ஆகஸ்ட் 29ல் இருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடைபெறுதை இலக்காக அவர்கள் வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு மாநில காவல்துறை மற்றும் அருகில் உள்ள மாநிலங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தீவிர பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்கு அதிக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த இரண்டு நாட்களாகக் கோவை மற்றும் சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
''தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் முன்னர் தீவிரவாத சம்பவங்கள் நடந்ததால், அங்கு இன்னும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் காவல்துறையினர் உள்ளனர். இதுவரை யாரையும் நாங்கள் கைதுசெய்யவில்லை,'' என பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
மேலும், மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், இதுவரை சந்தேகிக்கப்படும் நபர் என யாருடைய புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
''காவல்துறையினர் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசின் உளவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனையை நடத்துகிறோம்,'' என அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்