இலங்கையின் முதல் 'ராட் ராடு' கார்: வியக்கும்படி மாற்றியமைக்கப்பட்ட 1970களின் வாகனம்

Sinoj

புதன், 13 மார்ச் 2024 (19:55 IST)
இலங்கையின் முதல்   'ராட் ராடு' கார்  எல்லோருடைய கவனத்தைப் பெற்றுள்ளது.
 
பலர் தங்கள் வாகனத்திற்கு புதிய தோற்றத்தைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இலங்கையின் கடவத்துவைச் சேர்ந்த தாரக்க தியுன் தாபரே தனது பழைய காருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்துள்ளார். உலகப் புகழ் பெற்ற 'Rat Rod' எனப்படும் முறையைப் பின்பற்றி தனது காரை அவர் மாற்றியுள்ளார்.
 
அதாவது முழுமையடையாத தோற்றம், கலவையான ஓவியங்கள், மலிவான பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்வது, இத்தகைய மாற்றங்களே 'Rat Rod' என்று அழைக்கப்படுகின்றன. இதை இலங்கையில் முதன் முதலாக செய்துள்ளார் தாபரே.
 
"பொதுவாக இவ்வகை கார்களில் 'Rat rod கார்' என்ற வாசகம் காரின் பின்பக்கம் எழுதப்பட்டிருக்கும். இந்த காரைப் பற்றி தெரியாதவர்களும் அதைக் குறித்து மேலும் தேடிப் படித்து அறிந்து கொள்ளலாம் என்பதற்காக அதை எழுதியிருப்பார்கள்" என்கிறார் தாரக்க தியுன் தாபரே.
 
இவர் தொழில்முறை வெட்டிங் போட்டோகிராஃபராக பணிபுரிகிறார்.
 
தனது மாற்றியமைக்கப்பட்ட கார் குறித்து பேசுகையில், "இது டொயோட்டா கரோலா கேஇ20 மாடல் கார், சுமார் ஆறு வருடங்களாக இதை பயன்படுத்தி வருகிறேன். 1971ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் இது. நான் வாங்கும் போது ஒரு சாதாரண காரைப் போல தான் இருந்தது. வாங்கியதிலிருந்து, இந்த காரின் மீது என் மனதில் தோன்றுவதை வரைவேன். நான் பார்த்த விஷயங்கள், எடுத்த புகைப்படங்கள் மற்றும் பல்வேறு வார்த்தைகள், குறியீடுகளை இதில் வரைந்துள்ளேன்" என்கிறார் அவர்.
 
"இவ்வாறு வரைவது எனக்கு பொழுதுபோக்கு அல்ல. எனது எண்ணங்களை வெளிப்படுத்தவும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும் என்னுடைய படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. இது போன்ற பழக்கங்கள் இளைஞர்களுக்கு ஆரோக்கியமானது என்று நான் நம்புகிறேன். சமூகத்தின் எதிர்மறை தாக்கங்களுக்கு அடிமையாவதை விட இதுபோன்ற பொழுதுபோக்குகளில் அவர்கள் ஈடுபடலாம்" என்கிறார் தாரக்க தியுன் தாபரே.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்