இலங்கைக்கு தமிழ்நாடு அனுப்பிய அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத நிலையில் மீட்பு
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:56 IST)
தமிழ்நாடு அரசு இலங்கைக்கு அனுப்பிய அரிசி மூட்டைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து, அன்றாட உணவுகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வந்த சூழ்நிலையில், இலங்கை வாழ் மக்களுக்கான தமிழக அரசாங்கம் கடந்த மே மாதம் பாரிய உதவித் திட்டத்தை வழங்கியிருந்தது.
தமிழகத்திலிருந்து கடந்த மே மாதம் 18ம் தேதி முதற்கட்ட உதவித் திட்டம், சென்னையிலிருந்து கொழும்பிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தினால் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கப்பட்டன.
கொழும்பை வந்தடைந்த பொருட்களை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அப்போது பொறுப்பேற்று, அதனை இலங்கை அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட பொருட்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வடக்கு பகுதிக்கும் பெருமளவிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திலுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்ட தமிழக அரசின் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பெருந்தொகை அரிசி, பாவனைக்கு உதவாத நிலையில், களஞ்சியசாலையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 1272 கிலோ எடையுடைய அரிசி தொகையே, இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அரிசி, முழுமையாக பாவனைக்கு உதவாத வகையில் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - ஆசிகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மதுராநகர் கிராமத்திலுள்ள அரச கட்டிடமொன்றிலிருந்தே, இந்த அரிசி மூடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகளே இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டு, பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இலட்சிணை பொறிக்கப்பட்ட, அரிசி மூடைகளே மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்டஅரிசி மூடைகள் தொடர்பில், பிரதேச மக்கள் வவுனியா பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு விரைந்த வவுனியா மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள்;, உதவி பிரதேச செயலாளர் உள்ளடங்கிய குழுவினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த அரிசியின் தரம் குறித்து ஆராய்வதற்காக, பொது சுகாதார பரிசோதகர்களும் சம்பவ இடத்திற்கு பிரசன்னமாகியுள்ளனர்.
இதன்படி, குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளிலிருந்து, 1272 கிலோகிராம் அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட அனைத்து அரிசி மூடைகளையும், பரிசோதனைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்வதாக, அதிகாரிகள் பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த மூடைகளிலுள்ள அரிசியை, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர், இதன்போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகத்தர்களின் பக்கத்தில் பிழைகள் இருந்தாலும், இந்த விடயம் பொது அமைப்புக்களுக்கு தெரியாமல் இருக்கவில்லை என கூறியுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, கிராமத்தை நடத்தவில்லை என கூறிய அவர், அதற்காகவே பொது அமைப்புக்களையும் தெரிவு செய்கின்றோம் என குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பொது அமைப்புக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலிருந்து குறித்த அரிசி மூடைகள் வவுனியாவிற்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட போது, மழையுடனான வானிலை நிலவியதாகவும், அதனால் சில பொருட்கள் மழையில் நனைந்தமையினால் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது குறித்த அரிசி மூடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும், பரிசோதனைகளின் பின்னர் அரிசியை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் சரியான தகவல்களை கூற முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த அரிசி மூடைகள், பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.