அழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி

வெள்ளி, 24 ஜூன் 2016 (03:28 IST)
Mountain Chicken Frog என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது.


 

 
உலகின் அழிவின் விளிம்பில் இருக்கும் மிகப்பெரிய தவளைகள் இவை.
 
இவை உருவத்தில் பெரியவை என்பதாலும், இவற்றின் இயற்கையான வாழ்விடமான கரீபியத் தீவுகளில் இவை உண்ணப்படுவதாலும் மலைக்கோழித்தவளை என்கிற வித்தியாசமான பெயரால் இவை அழைக்கப்படுகின்றன.
 
ஆனால் எங்கும் பரவியிருந்த இந்த தவளையினம், சிட்ரிட் என்கிற நோய் காரணமாக ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது. 
 
மற்ற நில நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் இந்த நோய் காரணமாக காட்டப்படுகிறது.
வளர்ப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த தவளைகளில் பன்னிரெண்டு ஜோடிகளை அடையாளம் கண்ட வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள், அவறைக்கொண்டு இனப்பெருக்கம் செய்ய முயல்கிறார்கள்.
 
இந்த தவளைகள் கப்பல் கண்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளன.
 
மரபணு ரீதியில் ஒத்துப்போன நான்கு ஜோடி தவளைகள் இப்படி வைக்கப்பட்டுள்ளன.
உடலியல் ரீதியில் ஒத்துப்போகத்தக்க இந்த தவளைகள் புதிய தலைமுறை மலைக்கோழித் தவளைகளை இனப்பெருக்கம் செய்யும் என்பது நம்பிக்கை.
 
‘எங்களால் முடிந்த அதிகபட்ச முயற்சியை நாங்கள் இதில் செய்கிறோம். இனப்பெருக்கம் செய்யவும் தலைப்பிரட்டைகள் வளரவும் ஏதுவான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். அவை தயாரானதும் மீண்டும் அவற்றின் இயற்கை சூழலில் கொண்டு சென்று விடப்போகிறோம்”, என்கிறார் செஸ்டர் மிருககாட்சி சாலையைச் சேர்ந்த டாக்டர் கெரார்டோ கார்சியா.
 
இங்கிலாந்தின் வடக்கே உருவாக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறு செயற்கை வெப்பமண்டலப் பகுதி, அழிவின் விளிம்பிலுள்ள இந்த தவளைகளுக்கு புதிய வாழ்வின் துவக்கமாக அமையலாம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்