பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்

செவ்வாய், 25 ஜனவரி 2022 (13:46 IST)
''தெய்வங்கள், தெய்வ நிலையை அடைந்த சாமியார்கள் சிலையை பஞ்சலோகத்தில் உருவாக்கியுள்ளோம். ஆனால், இது தற்போதுதான் முதல் முறையாக மொத்தம் 150 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில், பிபின் ராவத்தின் மார்பளவு பஞ்சலோக சிலையை உருவாக்கி வருகிறோம்,'' என்று ஸ்தபதி .ராம்குமார் தெரிவிக்கிறார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் இந்திய பாதுகாப்புப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரியும் ஒருவாரத்தில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிபின் ராவத்தின் மறைவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பிபின் ராவத்தின் மார்பளவு பஞ்சலோக சிலை தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பினர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கம், வெள்ளி, செப்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய 5 உலோகங்களில் இந்த சிலை தயாரிக்கப்படுகிறது.

முதல் பஞ்சலோக சிலை

சிலையை வடிவமைத்து வரும் கும்பகோணம் ராமசாமி ஸ்தபதி சிற்ப சாலையின் ஸ்தபதி ஏ.ராம்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புப்படை தலைமை தளபதி, மறைந்த பிபின் ராவத்தின் சிலை 3 அரை உயரத்தில் மார்பளவு சிலையாக, 150 கிலோவில் தயாராகி வருகிறது. தற்போது முதல்கட்டமாக களிமண்ணில் சிலையை உருவாக்கியுள்ளோம் என்றார்.

"இந்த வடிவத்தை முன்னாள் ராணுவத்தினர் பார்த்து ஒப்புதல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, மெழுகில் வார்ப்போம். பின்னர் பஞ்சலோகத்தில் அச்சு வார்க்கப்படும். அனைத்து பணிகளும் நிறைவு பெற இன்னும் 3 வாரங்கள் ஆகும். என்னுடன் முதுநிலைப் பட்டம் பெற்ற 5 பேர் இந்த சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் மிகுந்த கவனத்துடன், நுட்பமாக இந்த சிலையை உருவாக்கி வருகிறோம்," என்றார் ராம்குமார்.

மேலும், என் தாத்தா, தந்தையைத் தொடர்ந்து நானும் ஸ்தபதியாக உள்ளேன். வழக்கமாக, தலைவர்கள் சிலை வெண்கலத்தில் உருவாக்கியுள்ளோம். தெய்வங்கள், தெய்வ நிலையை அடைந்த சாமியார்கள் சிலையை பஞ்சலோகத்தில் உருவாக்கியுள்ளோம். ஆனால், மனிதர்களுக்கு பஞ்சலோக சிலை உருவாக்கியதில்லை. அந்த வகையில், இதுதான் முதல் பஞ்சலோக சிலை என்கிறார் ராமசாமி ஸ்தபதி.

8 மாநிலங்கள் வழியாக டெல்லிக்கு

பிபின் ராவத்தின் இந்த சிலையை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து டெல்லி போர் நினைவுச் சின்னம் வரை திறந்தவெளி வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல முன்னாள் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரரும் சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சமுக நல அமைப்பின் நிறுவனர் எஸ். பாபு பிபிசி தமிழிடம் கூறுகையில், பிபின் ராவத் எங்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார். ராணுவத்தினருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில், முன்மாதிரியாக பணியாற்றினார். அவர் தமிழ்நாட்டில், குன்னூரில் விபத்தில் இறந்தது பெரும் சோகம். அவரது சேவை, அர்ப்பணிப்பை காலம் கடந்தும் எடுத்துச் சொல்லும் வகையில் இந்த பஞ்சலோக சிலையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். வழக்கம் போன்ற ஒரு வெண்கல சிலையாக இல்லாமல், அவர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதைக் குறிக்கும் வகையில் பஞ்சலோகத்தில் இந்த சிலையை உருவாக்குகிறோம். அநேகமாக முதல் சிலையும் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், பிபின் ராவத்தின் சேவையை சொல்லும் அதேநேரத்தில் இளைஞர்கள் ராணுவ சேவைக்கு வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிபின் ராவத் சிலை தயாரானதும், சிலையை திறந்தவெளி வாகனத்தில் வைத்து பேரணியாக புறப்பட உள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து புறப்பட்டு 8 மாநிலங்கள் வழியாக புது டெல்லிக்கு செல்கிறோம். அங்கு போர் வீரர்கள் நினைவிடத்தில் சிலையை வைக்கும் வகையில் ஒப்படைக்க உள்ளோம். இதற்காக பிரதமரை சந்தித்து, அவரிடமே சிலையை ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளோம். சிலைக்கு கண் திறக்கும் நிகழ்ச்சிக்கு பிபின் ராவத்தின் மகளை அழைத்து வரவும் முயற்சித்து வருகிறோம்' என்றார்.

மேலும், இதே மாதிரி சிலைகளை சிறிய அளவில் உருவாக்கி, நினைவுப் பரிசாக வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். என்கிறார் எஸ்.பாபு.

தந்தை பணியாற்றிய பிரிவில் பிபின் ராவத்

பிபின் லக்ஷ்மன் சிங் ராவத் 1958ஆம் மார்ச் மாதம் 16ஆம் தேதி, தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடியில் பிறந்தார். சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார்.

1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் பிபின் ராவத் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவ பணியைத் தொடங்கினார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அவர் இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்