19 வயதான ஜாரா ரதர்ஃபோர்ட், கடுமையான வானிலை காரணமாக திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் கழித்து பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்க்-வெவெல்ஜெம் என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளார்.
இந்த பயணத்தின் போது, அவர் அலாஸ்காவின் நோம் என்ற இடத்தில் ஒரு மாத காலமும், ரஷ்யாவில் 41 நாட்களும் இருந்துள்ளார்.
பெல்ஜியம் திரும்பியதும், வின்செஸ்டரில் உள்ள செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவியை, அவரது குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்களும் வரவேற்றனர்.
பெல்ஜிய ரெட் டெவில்ஸ் சாகசக் குழுவில் (Belgian Red Devils aerobatic display team) இருந்து நான்கு விமானங்கள் அவருடன் தரையிறங்கியது.
அவர் தரையிறங்கிய பிறகு, அவர் பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியக் கொடிகளில் தன்னைப் போர்த்திக்கொண்டு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: "இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, நான் இன்னும் இதிலிருந்து வெளியில் வரவில்லை".
அவர் 32 ஆயிரம் மைல்கள் (51,000 கி.மீ) பறக்கும் சவாலை ஏற்றுக்கொண்டதற்கு மகிழ்ச்சி அடைந்ததாக, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
"சைபீரியாவுக்கு மேல் பறந்ததே கடினமான தருணம் - அது மிகவும் குளிராக இருந்தது; ஒருவேளை இயந்திரம் நின்று போனால், என்னை மீட்க பல மணிநேரம் ஆகும் தொலைவில் இருந்திருப்பேன். நான் உயிர் பிழைத்திருப்பேனா என்று எனக்குத் தெரியாது," என்று அவர் கூறினார்.
"எனது அனுபவங்களைப் பற்றி மக்களிடம் கூறவும், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய மக்களை ஊக்குவிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
"உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் - அதற்கு நீங்களும் செல்லுங்கள்"
இந்த பயணம், ஐந்து கண்டங்களில் 60க்கும் மேற்பட்ட நிறுத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதியன்று தொடங்கியது இந்த பயணம்.
இந்த பிரிட்டிஷ்-பெல்ஜிய விமானியின் பெற்றோர் இருவரும் விமானிகள். அவர்கள், மற்ற பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய தொழில்துறைகளில் ஈடுபட ஊக்குவிப்பதாக நம்புவதாகக் கூறுகின்றனர்.
ஹாம்ப்ஷயரில் உள்ள அவரது முன்னாள் பள்ளி மற்றும் அவரது ஷார்க் யூ.எல் விமானத்தின் ஸ்லோவாக்கியன் தயாரிப்பாளரான ஷார்க் உள்ளிட்டவர்கள் அளித்த ஆதரவு காரணமாக இந்த சவால் சாத்தியமானது.
ஜாராவை முதலில் வாழ்த்தியவர்களில், அவரது முன்னாள் பள்ளியும் ஒன்றாகும். அவரது சாதனை குறித்து "மிகவும் பெருமை" அடைந்ததாக அப்பள்ளி ட்வீட் செய்தது.
முன்னதாக, உலகைச் சுற்றி வந்த இளம் பெண் அமெரிக்கரான ஷேஸ்டா வைஸ் ஆவார். அப்போது அவருக்கு 30 வயது; 2017 ஆம் ஆண்டு, அவர் இந்த சவாலை மேற்கொண்டார். ஆண்களில், இந்த சாதனையைச் செய்தவருக்கு 18 வயது.
இந்த சாதனையைப் படைத்த இளைய பெண்மணி என்ற பெருமையுடன், ரதர்ஃபோர்ட் மைக்ரோலைட்டில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணியும் ஆவார். மேலும், விமானத்தில் தனியாக உலகைச் சுற்றி வந்த முதல் பெல்ஜியப் பெண்மணியும் ஆவார்.
இவரது பயணம் மூன்று மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், பல்வேறு வானிலை காரணமாக, வேறு விதமாக ஆனது. சைபீரியாவில் குளிர்காலம் நெருங்கி வருவதால், அவரது ரஷ்ய விசா காலாவதியானது.
இவர் நோம் பகுதிக்கு வந்தபோது, 39 விமானங்களில் மூன்று விமானங்கள் மட்டுமே திட்டமிட்டபடி சென்றிருந்தன, இவருடைய பாஸ்போர்ட் விமானம் மூலம் ஹூஸ்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பப்படும் வரை, காத்திருக்க வேண்டியிருந்தது.
மேலும், இவரது புதிய விசாவுடன் கூட, பெரிங் நீரிணையைப் கடக்க இன்னும் மூன்று வாரங்கள் பிடித்தது.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், அவர் இவ்வாறு கூறினார்: "இங்கு -18C. என் கைகள் உண்மையில் மிகவும் குளிராக உள்ளன. நான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக இங்கு இருக்கிறேன்".
"நான் பிஸியாக இருக்கிறேன், நான் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து விமானத்தை தயார் நிலையில் வைத்திருக்கிறேன்."
"வானிலை நன்றாக இல்லை. ஒவ்வொரு முறையும், ஒன்று ரஷ்யா மோசமாக உள்ளது அல்லது நோம் மோசமாக உள்ளது."
சைபீரியாவில் ஒருமுறை, தரையில் வெப்பநிலை -35C ஆகவும், காற்றில் -20C ஆகவும் இருந்தது. ஒரு மெக்கானிக், அவரது விமானத்தின் சில காற்று உட்கொள்ளலைத் தடுத்து, கடும் குளிரில் என்ஜினை சூடாக வைத்துக் கொள்ள உதவினார்.
ஆனால், முன்னேற்பாடுகள் இருந்தபோதிலும், ரதர்ஃபோர்ட் ஒரு வார காலம் மகதான் என்ற இடத்திலும், பின்னர், மூன்று வாரகாலம் அயன் என்ற இடத்தில் இருக்க வேண்டியிருந்தது.
வானிலை காரணமாக இந்தோனேசியாவில் உள்ள பந்தர் உதாரா ரஹாடி உஸ்மான் பகுதியில் திட்டமிடப்படாமல் விமானத்தை நிறுத்த வேண்டியிருந்தது. மேலும், விமான நிலையத்தை விட்டு வெளியேற தேவையான ஆவணங்கள் இல்லாததால் அவர் இரண்டு இரவுகள் விமான நிலையத்திலே கழித்தார்.
இத்தகைய பின்னடைவுகள் இருந்தபோதிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக கொண்ட்டாடினாலும், இந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் தோன்றுகிறார்.
கலிபோர்னியாவில் காட்டுத்தீ புகை ஏற்பட்டிருந்த நிலையில், அங்கு பறப்பது ஒரு புதிய சவாலாக இருந்ததாக அவர் கூறினார்.
அவரது கருவிகள் நியூ மெக்சிகோவில் தடுக்கப்பட்ட பிட்டோட் ட்யூப் காரணமாக செயலிழந்தன. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, கிழிந்த டயர் காரணமாக, சிங்கப்பூரில் சிக்கித் தவித்தார்.
மெக்சிகோவின் வெராக்ரூஸ் என்ற இடத்தில் இருந்தபோது, அவர் ஹோட்டல் அறையில் ஆறாவது மாடியில் இருந்தார். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது.
"திடீரென்று கட்டிடம் அசையத் தொடங்கியது. நான் படிக்கட்டுகளில் இருந்து அவ்வளவு வேகமாக எப்போதும் ஓடியதில்லை என்று நினைக்கிறேன். இந்த பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதி காற்றில் இருக்கும் என்றே நான் எதிர்பார்த்தேன்," என்று கூறுகிறார்.
செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜேன் காண்டே, மாணவர்களும் ஊழியர்களும் ரதர்ஃபோர்டின் பயணத்தை "ஆர்வத்துடனும் முன்மாதிரியாகவும்" பின்தொடர்ந்ததாக கூறினார்.
"உண்மையாக விமானத்தில் பறப்பதும் வழி நடத்தி செல்வதும் போதுமான சவாலாக இல்லாதது போல், அவர் தீவிர வானிலை மற்றும் சிக்கலான அதிகாரத்துவத்துடன் போராட வேண்டியிருந்தது.
"இந்த பயணம் முழுவதும் அவர் காட்டிய நல்ல நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சிக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.", என்று அவர் கூறுகிறார்.
"ஜாராவால் எங்கள் மாணவர்களில் ஐம்பது பேர் பறப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும், உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறுகிறார்.