’’சீனாவுடன் சண்டையிடாமல் மோதி எங்களுடன் சண்டையிடுகிறார்’’- காங்கிரஸ்
சனி, 27 ஜூன் 2020 (10:11 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி: சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார்
சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார் என்று பிரதமர் மோதியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது
லடாக்கில் சீன படைகளுடன் ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து சீன விவகாரத்தை முன்வைத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ‘ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு’ 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
அத்துடன்,’’காங்கிரசும் அதன் தலைமையும் சீனாவிற்கு ஆதரவாகப் பேசுவதற்கு காரணம் உள்ளது. காங்கிரசின் முந்தைய ஆட்சிகாலத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தான் இதற்கு முக்கிய காரணம். அவர் சீனாவிற்காக வேலை செய்பவர். காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே செய்யப்பட்ட ரகசிய ஒப்பந்தங்கள் மூலம் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு முறைகேடாக பணம் கிடைக்க வழி செய்தவர்’’ என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்தது.
இந்நிலையில் சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார் என்று பிரதமர் மோதியை காங்கிரஸ் கடுமையாக விமற்சித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் பவன் கேரா,’’ பிரதமர் மோதி சீனாவுடன் சண்டையிட்டு இழந்த பகுதிகளை மீட்பார் என்று பார்த்தால், அவர் காங்கிரசுடன் சண்டையிடுகிறார் பாஜக ஒவ்வொரு நாளும் ஆதாரமில்லாத புதுப்புது குற்றச்சாட்டுகளைக் காங்கிரசை நோக்கி கூறிக்கொண்டே இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.