அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்கு அனுப்பிய மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

புதன், 14 டிசம்பர் 2022 (09:35 IST)
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை அரையிறுதியில் வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
 
இந்த அரையிறுதி ஆட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன். 2018ஆம் ஆண்டில், குரூப் ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா குரோஷியாவை எதிர்கொண்டது.
 
இப்போது போலவே, அப்போதும் இரு அணிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள் இருந்தனர். அர்ஜென்டினாவிடம் லியோனெல் மெஸ்ஸி. குரோஷியாவிடம் லூகா மோட்ரிச். ரஷ்யாவின் நிஷ்னி நோவ்கோரோட் மைதானத்தில் போட்டி நடந்தது.
 
அதற்கு முந்தைய ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்திடம் டிரா செய்திருந்ததால், இந்த வெற்றி அர்ஜென்டினாவுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஆனால், குரோஷியா, 0-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அவர்களுக்குப் பரிசளித்தது.
இப்போது இந்த அரையிறுதிச் சுற்றுக்கு வருவோம். அதேபோல் குரோஷியாவும் அர்ஜென்டினாவும் மோதின. முடிவு அதேபோல் மூன்று கோல்களுடன் முடிந்தன. ஆனால் அடித்தது அர்ஜென்டினா. 3-0 என்ற கோல் கணக்கில், லியோனெல் மெஸ்ஸியும் ஹூலியன் ஆல்வாரெஸும் அர்ஜென்டினா அணியை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
 
லியோனெல் மெஸ்ஸியும் லூகா மோட்ரிச்சும் முதல்முறையாக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மோதினார்கள். அந்தப் போட்டியில் தான், சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸி தன்னுடைய முதல் கோலை அடித்தார். மோட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதுதான் முதல் ஆட்டம்.
 
அது முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இருவரும் இன்னமும் அதே அளவு வேகத்துடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்போடு களத்தில் போரிட்டனர். இரண்டு அணிகளிலும் இருந்த எல்.எம்10 (LM10) ஜெர்சிகளில் எது வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய கால்பந்து ரசிகர்களிடையே இருந்தது.
 
ஆல்வாரெஸின் அதிரடி ஆட்டம்
குரோஷியா அணியில் கோவாசிச், ப்ரோசோவிச், லூகா மோட்ரிச் என்று அபாரமான மிட் ஃபீல்டர்கள் இருந்தனர். அவர்களை மீறி, குரோஷியாவின் கோல் போஸ்டுக்கு பந்தை எடுத்துச் செல்வது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அர்ஜென்டினா இந்த முறை ஒவ்வோர் ஆட்டத்திலுமே லைன்-அப்களை எதிரணிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருந்தனர்.
 
இந்தமுறையும் அதேபோல், டி பால், பரேடெஸ், ஃபெர்னாண்டெஸ், மெக் ஆலிஸ்டர் என்று எதிரணியின் பலம் மிக்க மூன்று மிட்ஃபீல்டர்களை சமாளிக்க நான்கு மிட் ஃபீல்டர்களை களமிறக்கினார், லியோனெல் ஸ்கலோனி. அது நல்ல பலனையும் தந்தது.
 
குரோஷியா கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச், ஆல்வாரெஸ் கோல் அடிக்க முயன்றபோது செய்த தவறைத் தொடர்ந்து 34வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. அவர் எடுத்துக் கொடுத்த அந்த பெனால்டியில் இருந்துதான், அர்ஜென்டினா தனது வெற்றிக்கான முதல் கோலை அடித்தது. அதை அடித்தவர், மெஸ்ஸி.
இந்த உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி அடித்த ஐந்து கோல்களில் நான்கு கோல்களை, அரையிறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் அடித்திருந்தார். இந்தப் போட்டியிலும் அவர் கோல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை 34வது நிமிடத்திலேயே ஹூலியன் ஆல்வாரெஸ் வாங்கிக் கொடுத்த ஒரு பெனால்டி ஷாட் மூலம் அடித்துக் காட்டினார்.
 
அந்த பெனால்டி ஷாட் அவ்வளவு துல்லியமாக இருந்தது. கோல் போஸ்டுக்குள் வலது புறத்தின் மேற்புற முனையை நோக்கி அடித்தார். கோல்கீப்பர் எதிர்பார்க்க முடியாத ஷாட் அது. ஆனால், சற்று அபாயகரமானதும்கூட. கொஞ்சம் தவறினாலும், கம்பத்திற்கு வெளியே சென்றுவிடக்கூடும். ஆனால், பெனால்டி ஷாட்களில் வல்லுநரான மெஸ்ஸியின் துல்லியம் தவறாகவில்லை.
 
அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே ஆல்வாரெஸும் ஒரு கோலை அடித்தார். மைதானத்தின் நடுவே, மெஸ்ஸி பாஸ் செய்த பந்தை டிரிப்பிள் செய்துகொண்டே சென்ற ஆல்வாரெஸ், அவரைத் தடுத்த ஜோசிப் ஜூரனோவிச்சை தாண்டி பந்தை குரோஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார்.
 
கோல் போஸ்டுக்கு அருகே சென்றபோது, போரா சோசாவின் தற்காப்பு ஆட்டத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்தும் அவர் பந்தை லாகவமாக தட்டிச் சென்று கோல் அடித்தபோது, கிட்டத்தட்ட கோல் கீப்பர் லிவாகோவிச்சுடன் மோதிக் கீழே விழும் அளவுக்குச் சென்றுவிட்டர். அந்த நிமிடத்தில் விழுந்தது அர்ஜென்டினாவின் இரண்டாவது கோல்.
 
இந்தத் தருணத்தில் தான் அவர் அர்ஜென்டினா அணி தேடிக் கொண்டிருந்த ஸ்டிரைக்கராக இருப்பாரோ என்ற ஆச்சர்யம் எழுந்தது.
 
மெஸ்ஸியின் மேஜிக்
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்புக்காக ஆடும் 22 வயதான ஹூலியன் ஆல்வாரெஸ் என்ற ஸ்டிரைக்கர் இந்தப் போட்டியின் மூலம், அர்ஜென்டினா நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு தரமான ஸ்டிரைக்கராக தன்னை நிரூபித்துள்ளார்.
மெஸ்ஸி பாஸ் செய்த பந்தில் இரண்டாவது கோலையும் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளின் கோல் ஸ்கோரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கூடவே, மெஸ்ஸி அடித்த பெனால்டி ஷாட் கிடைக்கவும் ஆல்வாரெஸ் காரணமாக இருந்துள்ளார்.
 
ஆட்டத்தின் 40வது நிமிடத்திலேயே ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது.
 
அதைத் தொடர்ந்து மூன்றாவதாக விழுந்த கோல், ஏதோ தற்செயலானது என்றோ அதிர்ஷ்டவசமானது என்றோ புறந்தள்ளிவிட முடியாத அளவுக்கு அபாரமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.
 
அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.
 
குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.
ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார் எனக் கூறினால் அது மிகையில்லை. அப்படிப்பட்ட வசீகரிக்கக்கூடிய விளையாட்டைக் காட்டி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதிலிருந்து 69வது நிமிடத்தில் விழுந்தது மூன்றாவது கோல்.
 
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினாவின் வியூகம்
இரண்டாவது பாதி தொடங்கியதில் இருந்தே குரோஷியாவிடம் பதற்றமும் வேகமும் அதிகமாக இருந்தது. ஆனால், அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக, தங்கள் வியூகத்தைத் திறம்பட வகுத்திருந்தனர்.
 
அர்ஜென்டினா வீரர்களின் கால்களுக்கு பந்து வந்தால், அதை குரோஷியா மீட்பதற்கு ஆன நேரம் சராசரியாக 15 விநாடிகள். அதுவே, குரோஷியாவிடம் இருந்து அர்ஜென்டினா பந்தை மீட்பதற்கு சராசரியாக 22 விநாடிகள் ஆனது. ஆகையால், பந்தை குரோஷியா கால்களுக்குச் செல்வதை இயன்ற அளவுக்குத் தடுத்துக் கொண்டேயிருந்தனர்.
 
பந்து அதிக நேரம் தங்களிடம் இருந்திருந்தால், எதிரணிக்கு நம்பிக்கை வளர்ந்திருக்கும். அந்த நம்பிக்கை ஆட்டத்திலும் பிரதிபலித்திருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் அர்ஜென்டினா தடுத்துக் கொண்டேயிருந்தது. இத்தகைய அனுபவமிக்க ஆட்டத்தைக் காட்டியதோடு மட்டுமின்றி, மூன்று கோல்களை அடித்துவிட்டோம், இனி கவலையில்லை என்று அணியினர் கவலையின்றி நின்றுவிடவில்லை.
 
பிரேசில் செய்த அந்தத் தவறை அவர்கள் செய்யவில்லை. ஆட்டத்தின் இறுதி வரை, யார் பந்தை எதிரணியிடம் தவற விடுகிறார்களோ அவர்களே அதைப் பின்தொடர்ந்து சென்று பந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
 
1978, 1986 உலகக் கோப்பை வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுத் தருவதற்காக, தங்கள் ரசிகர்களின் 36 ஆண்டுகால கனவை நனவாக்குவதற்காக, இறுதிச் சுற்றுக்குள் சாவகாசமாக அர்ஜென்டினா நுழைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
 
இந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக, “நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பதற்றத்தோடு விளையாடப் போவதில்லை. ஆட்டங்களை நன்கு அனுபவித்து, மகிழ்ச்சியோடு ஆடப் போகிறோம்,” என்று தெரிவித்திருந்தார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் ஸ்கலோனி. அது எந்தளவுக்கு உண்மை என்பதை நேற்றைய ஆட்டத்தில் அவருடைய வீரர்கள் காட்டினர்.
 
1990இல் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் கேமரூனுடனும், இப்போதைய உலகக் கோப்பையில் சௌதி அரேபியாவிடம் தோல்வியடைந்து திகைப்பை ஏற்படுத்தியபதைப் போலவே நிகழ்ந்தது. பிறகு அதிலும் இதேபோல் இறுதிப் போட்டிக்குள் சென்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
 
இப்போது, உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால், அப்போதைய ஆட்டத்தைவிடச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பை என்னும் கிரீடத்தைச் சுமக்க மெஸ்ஸிக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு இது என்பதால், அவரோடு மனதளவில் ஒத்துப்போயிருக்கும், அவரைக் காதலிக்கும் அணியினர் இந்த ஆட்டத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.
 
தோற்றாலும் இதயங்களை வென்ற குரோஷியா
அரையிறுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் தங்கள் ஆட்டத்தை குரோஷியா தொடங்கியிருந்தாலும், மெஸ்ஸியும் அவருக்குப் பக்கபலமாக நின்ற ஆல்வாரெஸும் வெளிப்படுத்திய புத்திசாலித்தனமான ஆட்டத்திற்கு வீழ்ந்துள்ளது.
 
அர்ஜென்டினாவின் முதல் இரண்டு கோல்களின் மூலம், அவர்களுடைய தற்காப்பு நுணுக்கமாக விலக்கப்பட்டது. அவர்களுடைய சிறந்த இளம் தற்காப்பு ஆட்டக்காரர் கவார்டியோல் கூட, மெஸ்ஸியின் ட்விஸ்டிங் ஓட்டத்தில் எதையும் செய்ய முடியாமல் போனது.
 
எப்படியிருப்பினும், குரோஷியா மீண்டுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 40 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் ஒரு நாடு 2018இல் ரஷ்யாவில் நடந்த இறுதிப் போட்டி வரை சென்றது, இப்போது கத்தாரில் அரையிறுதி வரை வந்து, முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடிக்கப் போகிறது.
 
அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி என்றால், குரோஷியாவுக்கு லூகா மோட்ரிச் என்ற ஜாம்பவான் இருக்கிறார். ஒன்பது நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், தனது ஆட்டத்திற்காக லுசைல் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அன்பு நிறைந்த கைத்தட்டல்களைப் பெற்றார்.
 
கடந்த முறை தோல்வியின் வலியை எதிர்கொண்ட பிறகு, மெஸ்ஸியை போலவே அவரும் உலகக் கோப்பை மீது கண் வைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.
 
குரோஷியா, தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இறுதிவரை மேற்கொண்ட முயற்சியை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டும். 20 வயதான ஆர்.பி லைப்சிக், டிஃபெண்டர் கவார்டியோல் போன்ற நட்சத்திரங்களை அவர்களுக்கு இந்த உலகக் கோப்பை வெளிக்காட்டியுள்ளது.
 
அடுத்ததாக, பிரான்ஸ் அல்லது மொராக்கோவை அர்ஜென்டினா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருவரில் எவர் இறுதிச்சுற்றுக்கு வந்தாலும் அது மிகக் கடினமான ஆட்டமாகவே இருக்கும்.
 
கடந்த முறை கோப்பையை வென்ற பிரான்ஸ், சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக்கொள்ள முழு வேகத்துடன் ஆடி வருகிறது. இன்னொருபுறம், மொராக்கோ அனைவரின் யூகங்களையும் உடைத்து, தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது.
 
பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற பெரிய அணிகளிடம் எதிர்பாராத ஆட்டத்தைக் காட்டியுள்ளது மொராக்கோ. ஆகவே, இறுதிச்சுற்றுக்குள் இரண்டில் எந்த அணி வந்தாலும், கோப்பைக்கான இறுதி ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு எளிதானதாக இருந்துவிடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்