இலங்கையின் கிழக்கு மாகாணம் கிண்ணியா - குறுஞ்சாக்கேணி பகுதியில் அமைந்துள்ள ஆற்றை, படகு கவிழ்ந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் தொடர்பில், கிண்ணியா நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம். நளீம் இன்று (26) கைது செய்யப்பட்டு கிண்ணியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 9ஆம் தேதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க மேற்படி படகு சேவையை நடத்தியவர் உள்ளிட்ட மூவரை, நேற்று (24) போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, அவர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியிலுள்ள ஆற்றைக் கடப்பதற்கு 1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்தமையை அடுத்து, புதிய பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு - கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வைபவ ரீதியாக இடம்பெற்றது. எனினும் குறித்த பாலத்தை நிர்மாணிக்கும் வேலை மந்த கதியில் நடைபெற்று வந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.