ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறதா?

வெள்ளி, 2 ஜூலை 2021 (11:19 IST)
ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது.
 
ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
 
ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவில் இரண்டு குறைந்த தீவிர வெடிப்புகள் ஏற்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போரின் புதிய அத்தியாயமாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்களை கடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு விமான தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, ட்ரோன்களின் துல்லியமான பயன்பாட்டுத் திறன் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.
 
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள்
 
 
பல ஆண்டுகளாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது ட்ரோன்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் ட்ரோன் அல்லது ட்ரோன் போன்ற சாதனத்தை எப்போதெல்லாம் எதிர்கொள்கிறார்களோ அப்போதெல்லாம், சம்பந்தப்பட்ட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அது குறித்த தகவலை தெரிவிக்கின்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
 
கண்டறியப்பட்ட சாதனங்கள் உண்மையில் ட்ரோன்கள் தானா, அப்படியானால், என்ன வகையான ட்ரோன்கள் என்பதையும் இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் கண்டுபிடிக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி, கத்துவா வந்த ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, ​​அதிலிருந்து ஒரு செமி ஆட்டோமேட்டிக் கார்பைன் துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. இந்த ட்ரோனின் எடை சுமார் 18 கிலோ இருக்கலாம், அது 5-6 கிலோ எடையைச் சுமந்து பறந்து கொண்டிருந்தது. இந்த ட்ரோனின் பெரும்பாலான பகுதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஆண்டு செப்டம்பரில், ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், "நாட்டில் ட்ரோன்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தேவையான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன" என கூறியது.
 
இது குறித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, அரசு, "முக்கியமான பாதுகாப்பு இலக்குகள் மீதான ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க நிலையான நடைமுறை விதிமுறைகள் (எஸ்ஓபி) வெளியிடப்பட்டுள்ளன" என பதிலளித்திருந்தது.
 
இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா?
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்கள் தொடர்ச்சியாகப் பறக்கும் நிலையைக் கொண்டு, ட்ரோன்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை யூகிக்க முடிகிறது. ஜம்மு தாக்குதலுக்குப் பிறகு, இதுபோன்ற தாக்குதல்களைச் சமாளிக்க இந்தியா தயாரா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
 
டெல்லியில் இருந்து இயங்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கான்ஃபிளிட் மேனேஜ்மென்ட் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் அஜய் சாஹ்னி.
 
பிபிசியிடம் பேசிய அவர், "இந்தியப் பாதுகாப்புத் துறை எதிர்வினையில் ஒரு சிக்கல் என்னவென்றால், அது ஒரு எதிர்வினை மட்டுமே என்பதுதான். பாதுகாப்புத் துறையின் தேவைகளை அதிகாரிகளே முன்னெடுக்கின்றனர். ஆனால், உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியான புரிதல் அதிகம் இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.
 
மேலும் அவர், "2016-17க்குப் பிறகு, பயங்கரவாதிகள் பல இடங்களில் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தினர். ஐ எஸ் அமைப்பு, சிரியாவில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியது. அவர்கள் வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களுடன் தாக்குதல்களை நடத்தினர்.
 
இவை மிகவும் அதிநவீன கருவிகள் அல்ல. இவை வணிகரீதியாக கிடைக்கக்கூடிய ட்ரோன்கள்தான். அவற்றில் தேவையான வெடிபொருட்களை நிரப்பி, இலக்கை நிர்ணயித்துத் தாக்குதல் நடத்தமுடியும்" என்று விளக்குகிறார் அவர்.
 
ட்ரோன் தாக்குதல்கள் அபாயகரமானவை
 
ட்ரோன் மிகவும் பயனுள்ள ஒரு கருவியாக இல்லாவிட்டாலும், மிகப்பெரிய பேரழிவுத் தாக்குதல்களை துல்லியமாக நடத்தப் பயன்படும் ஆபத்தான கருவி என்கிறார் சாஹ்னி.
 
"எல்லை தாண்டிய தாக்குதல்கள் ட்ரோன்களால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல். ஆயுதங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்துவதற்குக் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 2-3 ட்ரோன் பிடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவை பல முறை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவர்கள் 10 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையைச் சுமக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள். 10 கிலோ இராணுவத் தர வெடிபொருளைக் கொண்டு இலக்கைத் தாக்கும் திறன் இருந்தால், அது பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தும் " என அவர் விளக்குகிறார்.
 
இதனால்தான் முன்பை விட ட்ரோன்களின் ஆபத்துகள் குறித்து இந்தியாவில் அதிக விழிப்புணர்வும் தயார்நிலையும் இருந்திருக்க வேண்டும் என சாஹ்னி கருதுகிறார்.
 
"இப்போது பிரச்சனை என்னவென்றால், உத்தி ரீதியிலான தயார் நிலை என்பது இந்தியாவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. தன்னிச்சையாக ஆயுதம் வாங்கவோ, எதிர்வினையாற்றவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இதற்கான அனைத்து அதிகாரங்களும் அரசியல் நிர்வாகம் மற்றும் சிவில் அதிகார அமைப்புகளிடம் உள்ளன.
 
இந்த அச்சுறுத்தல், அதைச் சமாளிக்கத் தேவையான ஆயத்த நிலை பற்றி இராணுவத்தால் பேச முடியும், ஆனால் சிவில் அதிகார மையங்கள் தகுந்த பதில் அளிக்காவிட்டால் அதனால் பயனில்லை. இந்தியாவில் சிவில் அதிகார அமைப்பு எப்படி இருக்கிறது என்பது நாம் அறிந்ததே" என்று கூறுகிறார் அவர்.
 
பாதுகாப்புத் துறையில், அரசியல் அதிகாரம், தேர்தலில் வெற்றி தரக்கூடிய முடிவுகளையும் உத்திகளையுமே பரிந்துரைக்கிறது என்றும் சாஹ்னி குற்றம் சாட்டுகிறார்.
 
"களத்தில் போராடுவோருக்கு அதிகாரளிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அக்கறை இல்லை. முடிவெடுப்பதில் பின்பற்றப்படும் இந்தத் தன்மையால் தான் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும்," என்கிறார் அவர்.
 
"இப்போது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. நாளை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மூலம், எதாவது ஒன்று நடக்கும், நாம் வியப்போம். சம்பவம் நடந்து முடிந்த பிறகுதான் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம். "எதிர்காலத்தில் ரோபாட்டிக்ஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எதிர்காலத்தில் ரோபோ சாதனங்கள் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்படலாம். இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவோ எதிர்கொள்ளவோ நாம் தயாராக இருக்கிறோமா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
 
"இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பாதுகாப்புப் படையில் விவாதப்பொருளாக நிச்சயம் இருக்கும். ஆனால் யார் அவர்கள் சொல்வதைக் கேட்கிறார்கள்? தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியாது. பாதுகாப்புப் படையினர் ஒருவித தற்காப்பு நெறிமுறையை உருவாக்கி உயிரிழப்புகளைக் குறைக்க முடியும். ஆனால் இதற்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அரசியல் மற்றும் அதிகார அமைப்புகளிடம்தான் உள்ளது" என்கிறார் சாஹ்னி.
 
புதிய அபாயத்துக்கேற்ப புதிய அடி எடுப்பது ஏன் தேவை?
 
ட்ரோன் தாக்குதல்களை "பயங்கரவாதத்தின் ஒரு புதிய பரிமாணம்" என்று இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.அஸ்தானா குறிப்பிடுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "ட்ரோன்கள் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. அது அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல் அல்லது ஹமாசுடனான இஸ்ரேலின் மோதலாக இருந்தாலும், ட்ரோன்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களிலும் பாகிஸ்தானியர்கள் சில ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் விநியோகிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய நிகழ்வில், ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் துல்லியத்தன்மை அதிகரித்துள்ளது. அதுதான் தற்போது கவலைக்குரிய விஷயம். இந்த துல்லியம் என்பது இதற்குப் பின்னால் ஒரு நிபுணரின் பங்களிப்பு இருந்திருக்கும் என்பதைத்தான் காட்டுகிறது." என்று கூறுகிறார்.
 
ஒரு ட்ரோனில் வெடிபொருட்களை நிரப்பி, சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெடிப்பதை உறுதி செய்வது, அதன் பின்னால் ஒரு நிபுணர் இருப்பதைக் காட்டுகிறது என்று அஸ்தானா கூறுகிறார். ட்ரோன்கள் வெடித்துச் சிதறி விடுவதால், அது குறித்த தகவல்களைத் திரட்டுவது கடினமாகிவிடுகிறது.
 
வணிக பயன்பாட்டுக்கு கிடைக்கக்கூடிய பல ட்ரோன்கள் ரேடார் மூலம் கண்டறியப்படுவதில்லை என்றும் பல ட்ரோன்களைக் கண்டுபிடிப்பதில் அனைத்து லைன் ஆஃப் விஷன் கண்காணிப்பு அமைப்புகளும் தோற்றுப் போகின்றன என்றும் அஸ்தானா கூறுகிறார்.
 
"இது ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதால் அதற்கேற்ப தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். எங்களிடம் சில அமைப்புகள் உள்ளன. அனைத்து விமான நிலையங்களும் வான் பாதுகாப்பு ஆயுதங்களால் பாதுகாக்கப்படுபவை. ஒரு ட்ரோன் மிக மெதுவாகப் பறந்தால், விமான எதிர்ப்புத் துப்பாக்கியால் அதைச் சுட்டு வீழ்த்த முடியும். அதற்கு ஏவுகணைகள் அல்லது உயர் தர ரேடார்கள் தேவையில்லை. " என்கிறார் அஸ்தானா.
 
ஒரு ட்ரோன் ஒரு அதிநவீன வகை ட்ரோனாக இருந்தால் மட்டுமே மிக வேகமாகப் பறக்க முடியும். ஜம்மு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் மிகவும் மெதுவாகப் பறந்ததாகவே அவர் கூறுகிறார். "நீங்கள் குறைந்த உயரத்தில் துல்லியமாக நோக்கினால், ஒரு வேளை இத்தகைய ட்ரோன்களை இலக்கு வைக்கலாம்" என்பது இவர் கருத்து.
 
தீர்வு என்ன?
 
பாகிஸ்தான் எல்லையில் ஸ்மார்ட் ஃபென்சிங் பற்றி இந்தியா பல ஆண்டுகளாக பேசி வருகிறது. ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் ஃபென்சிங்கை மேலும் மேம்படுத்த முடியும் என்று அஸ்தானா கூறுகிறார்.
 
"ட்ரோன்கள் குறைந்த உயரத்தில் பறப்பதால், அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது. ஆனால் உங்கள் ட்ரோன்கள் சாதாரண ட்ரோன்களை விட அதிக உயரத்தில் பறந்தால், அவை குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்களைக் கண்டறிய முடியும்," என்று அவர் கூறுகிறார்.
 
கண்காணிப்புக் கருவிகள் நாடு முழுவதிலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்று சாஹ்னி கூறுகிறார். "ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஒரு தொழில்நுட்ப எதிர்மறைச் செயல்பாடு உள்ளது. அவற்றை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம், அவை எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் கேள்வி" என்கிறார் அவர்.
 
இந்தியாவில் பொதுவாகவே, ஒரு எதிர்வினை என்பது ஒரு குறியீடாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என சாஹ்னி கருதுகிறார். "ஒரு ட்ரோன் காற்றில் பறக்கத் தொடங்கிய உடனேயே அதைக் கண்டறிந்து பதிலடி கொடுக்கும் வகையில் திறன் கொண்ட ஒன்று நமக்கு மிகவும் தேவை" என்று அவர் கூறுகிறார்.
 
இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பமான அயர்ன் டோமை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறார் சாஹ்னி, "அது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. இருப்பினும் சில ஏவுகணைகள் தப்பிவிடுவதும் உண்டு. அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் குறைந்த பட்ச சேதத்துடன் சரியான எதிர்வினை ஆற்றக்கூடிய ஒரு அணுகுமுறை தேவை. இதற்குச் சிறப்பான திட்டமிடல் தேவை. ஆனால் முடிவெடுக்கும் அதிகார அமைப்பின் செயல்படும் முறை மிகவும் திறமையற்றதாக, நிலைமையை உணரமுடியாததாக இருப்பது துரதிர்ஷ்டம்" என்கிறார் அவர்.
 
சந்தையில் ட்ரோன்கள் எளிதில் கிடைப்பது, பயங்கரவாதிகளுக்கு அவற்றை மேம்படுத்தி ஆயுதமாக பயன்படுத்தும் வாய்ப்பைக் கொடுக்கின்றன என்று அஸ்தானா கூறுகிறார். ஒரு சாதாரண ட்ரோனை ஆயுதமாக மாற்ற முடியும் என்றால், அது குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
 
இப்படி ஒரு வகையான தொழில்நுட்பம் இருக்கிறது, அதைப் பயன்படுத்துவது ஆபத்தானது. ஜம்முவில் அது ஒரு கூரையை மட்டுமே தாக்கியது, ஆனால் அது ஒரு போர் விமானத்தைத் தாக்கிப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கவும் கூடும் என்பது கவலைக்குரிய விஷயம்" என்று எச்சரிக்கிறார் அஸ்தானா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்