வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி? - எளிய விளக்கம்!
புதன், 5 ஜூலை 2023 (11:51 IST)
ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளில் தாக்கல் செய்ய முடியும்.
வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது எப்படி? அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? விளக்குகிறது இந்தக் கட்டுரை
ஆன்லைனில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?
ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நீங்கள் முதலில் www.incometax.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த தளத்திற்கு சென்றவுடன் நீங்கள் பதிவு அல்லது ரிஜிஸ்டர் (Register) மற்றும் உள்நுழைவு அல்லது லாகின் (Login) தேர்வுகளை பார்க்க முடியும்.
இந்த தளத்திற்கு நீங்கள் முதன்முறையாக வருகிறீர்கள் என்றால் விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவராக இருந்தால் லாகின் செய்து கொள்ள வேண்டும். உங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும். இதில் லாகின் ஐடியாக உங்கள் ஆதார் அல்லது பான் கார்ட் எண்ணை வழங்கலாம்.
நீங்கள் லாகின் செய்தவுடன் உங்களின் விவரங்களை (profile) தகவலை சரி செய்து கொள்ள வ்யூ மை ப்ரோபைல் (view my profile)ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தகவலை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் லாகின் செய்த பிறகு e – file என்ற தேர்வை க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அதில் file income tax return என்று தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்பு வருடம் 2022 – 23 என தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய விரும்புவதால் ஆன்லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் இதற்கு முன்பு ஏதேனும் தகவலை சேவ் செய்யவில்லை என்றால், ஸ்டார்ட் நியூ ஃபைலிங் (start new filing) ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு பொருந்தும் ஐடிஆரை தெரிந்து கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.
50 லட்சத்துக்கு கீழ் ஆண்டு ஊதியம் உள்ளவர்கள் ஐடிஆர் – 1ஐ தேர்வு செய்து கொள்ளலாம். இதுதான் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருக்கும்.
இதை பூர்த்தி செய்ய ஃபார்ம் 16, வீட்டு வாடகை ரசீது, எல்ஐசி போன்ற ஆவணங்களை நீங்கள் சரிபார்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்து உள்ளே சென்றவுடன் நீங்கள் ஐந்து தெரிவுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
Personal information – இதில் உங்கள் ஆதார் எண், முகவரி, வங்கி கணக்கு தகவல்கள் உட்பட உங்களின் தனிநபர் தகவல்களை வழங்க வேண்டும்.
Gross total income – இதில் உங்கள் வருமானம் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
Total deductions – இதில் உங்களுக்கு பொருத்தமான விலக்குகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
Tax paid – இதில் நீங்கள் செலுத்திய வரி அல்லது டிடிஎஸ் (TDS) குறித்த தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
Total tax liability tab – இதில் உங்கள் தகவல்களை சரி பார்த்து கொண்டு வரி ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை குறித்தும் பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து தேர்வுகளையும் பூர்த்தி செய்துவிட்டு நீங்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரியை தற்போது செலுத்துகிறீர்களா அல்லது பிறகு செலுத்துகிறீர்களா என்பதையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக அப்போதே செலுத்துவது சிரமங்களை குறைப்பதாக இருக்கும்.
இதற்கு பின்பு ஈ வெரிஃபை அதாவது தகவல் சரிபார்க்கப்பட்டு உங்கள் ரிட்டர்ன்ஸை நீங்கள் செலுத்தி விடலாம். இதை உறுதி செய்ய நீங்கள் ஒரு குறுந்தகவலையும் பெறுவீர்கள்.
ஐடிஆர் – 1,2,3,4 என்றால் என்ன?
ஐடிஆர் 1: மாத ஊதியம் அல்லது பென்ஷன் மூலம் வருமானம், ஒரு வீட்டு வாடகையிலிருந்து வருமானம், விவசாயத்திலிருந்து வருமானம் (5000 ஆயிரத்துக்கும் குறைவு), மற்றும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள் இதை தேர்வு செய்ய வேண்டும். இதில் இந்தியாவில் வசிப்பவராக இருப்பது மிக அவசியம்.
ஐடிஆர் 2: ஆண்டு வருமானம் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டிலிருந்து வருமானம், விவசாயத்திலிருந்து 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமானம், கேப்பிடல் கெயின்ஸ் (சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்றல் போன்றவை மூலமாக வரும் லாப நஷ்டம்) வெளிநாட்டு சொத்துக்கள் மூலம் வருமானம், என்ஆர்ஐ போன்றோர் ஐடிஆர் – 2 ஐ தேர்வு செய்ய வேண்டும்
ஐடிஆர் 3: சொந்த தொழில் செய்யும் தனிநபர் இதனை தேர்வு செய்யலாம்.
ஐடிஆர் 4: சொந்த தொழில் செய்பவர்கள் அதே சமயம் வருடத்திற்கான டர்ன் ஓவர் இரண்டு கோடிக்கும் கீழ் இருந்தால் ஐடிஆர் – 4ன் கீழ் வருமான வரி தாக்கல் செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 44AD, 44ADA மற்றும் 44AE ஆகியவற்றின் கீழ் அனுமான வருமானத் திட்டத்தை தேர்வு செய்தவர்கள் இதனை தேர்ந்தெடுப்பர், தொழில் செய்வோர் முறையான கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பெரும் சுமையிலிருந்து விடுப்பட இந்த ஐடிஆர் 4 உருவாக்கப்பட்டுள்ளது என வருமான வரி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி விலக்குகள் பெறும் சாத்தியங்கள்
வருமான வரிச் சட்டம் 1961-ன் படி 80c, 80G, 80GG, 80D, 80TTA, 80E போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நீங்கள் வரி விலக்கை பெறலாம்.
வீட்டு லோன், எல்ஐசி, பிஎஃப் (பிராவிடண்ட் ஃபண்ட்), இபிஎஃப், விபிஎஃப், தேசிய ஓய்வூதிய திட்டம், குழந்தைகளுக்கான கல்விச் செலவு, தேசிய ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீடு, கல்விக் கடன், டொனேஷன், புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைக்கான செலவு, மாற்றுத்திறனாளிகள் அல்லது மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர் மூத்த குடிமக்களாக இருத்தல் போன்றவற்றின் மூலம் நீங்கள் வரி விலக்குகளை பெற முடியும்.
form 16 என்றால் என்ன?
Form 16 என்பது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும் படிவம் ஆகும். இது உங்கள் நிறுவனத்தால் உங்கள் வருமானத்திலிருந்து எவ்வளவு வரி பிடிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதரமாகவும் உள்ளது.
மேலும் நிதியாண்டின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் கொடுத்த முதலீட்டு விவரங்கள், நிறுவனம் உங்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளின் அடிப்படையில் உங்களுக்கான வரி எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதன் விவரம் இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ஃபார்ம் 16 உங்கள் நிறுவனத்தால் வருமான வரி துறைக்கு சமர்பிக்கப்படும். நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கு முதல் முக்கிய படிவமாக இது உள்ளது.