இலங்கையில் 13வது திருத்தம் எப்படி உருவானது? - பின்னணி என்ன?

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:45 IST)
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகள், நாளுக்கு நாள் வலுப் பெற்றதை அடுத்து, உள்நாட்டு போர் உருவானது.
 
சுதந்திரத்திற்குப் பின்னர், மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்ட பிரச்னைகள், பின்னரான காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது.
 
1956ம் ஆண்டு காலப் பகுதியில் அரிசி பங்கீட்டு முறைமை நீக்கப்பட்டமை காரணமாக, ஏற்பட்ட குழப்ப நிலையினால், அப்போதைய பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்க பதவி விலகினார்.
 
அதனைத் தொடர்ந்து, ஆட்சி பீடம் ஏறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1956ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதன் பின்னர், சிங்கள பண்பாட்டின் பாதுகாவலன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
 
இதையடுத்து, சிங்கள மொழி, இலங்கையில் ஒரே ஆட்சி மொழியாக கொண்டு வரப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட குழப்பகர நிலைமை காரணமாக 1958ம் ஆண்டு இந்தச் சட்டம் பகுதியளவில் திருத்தப்பட்டாலும், இந்தச் சட்டமானது தமிழர்கள் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் சட்டமான அவதானிக்கப்பட்டது.
 
தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டமாக இந்தச் சட்டம் கருதப்பட்டது.
 
இந்தச் சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை தமிழரசு கட்சி அறவழிப் போராட்டத்தை நடத்தியது.
 
இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
 
பண்டா - செல்வா ஒப்பந்தம் என அடையாளப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமையினால், குறித்த ஒப்பந்தம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
 
தனிச் சிங்கள சட்டமானது, தமிழ் - சிங்கள மக்களிடையே இனப் பிரச்னை ஏற்படுத்துவதற்கான முதலாவது காரணியாக அமைந்தது என சொல்லப்படுகின்றது.
 
அதற்குப் பின்னரான காலத்தில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
 
இந்த நிலையில், சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் வலுப் பெற்ற நிலையில், சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களின் தூண்டுதல் காரணமாக 70ம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் போராட்ட இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தன.
 
 
நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை உறுதிப்படுத்தும் வகையில், அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறையானது, பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்பை தட்டிப் பறிப்பதாக அமைந்தது.
 
இந்த செயற்பாடானது, தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு நேரடியாகவே வழிவகுத்தது என வரலாறு கூறுகின்றது.
 
யாழ்ப்பாணம் நகர சபை முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதன் ஊடாக, ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது.
 
இந்த நிலையில், 1977ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.
 
உலகிலேயே மிகவும் பெறுமதி நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாண நூலகம், 1981ம் ஆண்டு சிங்கள வன்முறை குழுக்களினால் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
 
இவ்வாறான நிலையில், 1983ம் ஆண்டு தமிழ் - சிங்கள மக்கள் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது.
 
இந்தச் சூழ்நிலையிலேயே, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை வலுப் பெற செய்திருந்தனர்.
 
1983ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் வைத்து, இலங்கை ராணுவத்தின் மீது, விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து 83ம் ஆண்டு ஜீலை மாதம் 24ம் தேதி இரவு, தலைநகர் கொழும்பிலுள்ள தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
சிங்ளவர்களினால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் வேறு பகுதிகள் மற்றும் வேறு நாடுகளை நோக்கி குடிபெயர்ந்திருந்தனர்.
 
1983ம் ஆண்டு கலவரமானது, விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்களை அணி திரள வழிவகுத்ததாக கூறப்படுகின்றது.
 
அதேபோன்று, 1983ம் ஆண்டு கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் கைதிகள், சிங்கள கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இவ்வாறான தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் பல்வேறு மோதல்கள் இடம்பெற்ற நிலையில், தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
 
தமிழர்களுக்கான காணி, போலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு உள்வாங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து மொத்தமாக 8 மாகாணங்கள் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டன.
 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
 
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.
 
இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
 
இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.
 
இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
 
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.
 
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.
 
அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.
 
இவ்வாறான நிலையில், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ம் தேதி கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்னைக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்