இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியபோது, அதன் தடுப்பு நடவடிக்கைக்காகவும், மீட்பு நடவடிக்கைக்காகவும் நாட்டு மக்கள் நன்கொடை அளிக்க வசதியாக ‘பி.எம்.கேர்ஸ் பண்ட்’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதியம்) தொடங்கப்பட்டது.
இது பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர்.
இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது.
தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கையை பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ரூ.2.25 லட்சத்துடன் தொடங்கிய பி.எம்.கேர்ஸ் நிதிக்கு மார்ச் 27-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரையில் (ஐந்தே நாளில்) ரூ.3,076.62 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்தவர்களின் தன்னார்வ பங்களிப்பு ரூ.3,075.85 கோடி; இத்துடன் ரூ.39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்புகளால் வந்துள்ளது. வட்டி வருமானத்தை சேர்த்தும், அன்னிய செலாவணி மாற்றத்துக்கான சேவை வரி குறைத்தும் மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி கையிருப்பு ரூ.3,076.62 கோடி” என கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் வரவு, செலவுகள் வெளிப்படையாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டின. அதை மத்திய அரசு மறுத்தது.