மேடையில் சரஸ்வதி படமா? எனக்கு விருது வேண்டாம்: மறுத்த எழுத்தாளர்!

திங்கள், 18 ஜனவரி 2021 (13:31 IST)
மராத்தி மொழியின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான யஸ்வந்த் மனோகர், விழா மேடையில் சரஸ்வதி படம் வைத்து பூஜை செய்வார்கள் என்பதால் தனக்கு வழங்கப்படவிருந்த விருதை மறுத்துள்ளார்.
 
'விதர்பா சாஹித்ய சங்' என்கிற அமைப்பு, மராத்தி எழுத்தாளர் யஸ்வந்த் மனோகருக்கு 'ஜீவன்வ்ரதி' என்கிற வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த ஜனவரி 14-ம் தேதி நாக்பூரில் நடக்கும் தங்களின் 98-ம் ஆண்டு விழாவில் வழங்கவிருந்தது.
 
ஒரு மாத காலத்துக்கு முன்பே எழுத்தாளர் மனோகருக்கு விருது கொடுப்பது தொடர்பான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. விழா மேடையில் சரஸ்வதியின் படம் வைக்கப்படும் என மனோகரிடம் அப்போது கூறப்படவில்லை என்று தெரிகிறது.
 
இந்த நிலையில், இந்த விருதுக்கு மறுப்பு தெரிவித்து விதர்பா சாஹித்ய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ள எழுத்தாளர் யஸ்வந்த் மனோகர், "பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு சுரண்டப்பட்டதன் அடையாளம் சரஸ்வதி. இலக்கிய நிகழ்ச்சிகளில் மதத்தை என்னால் அனுமதிக்க முடியாது.
 
ஒரு எழுத்தாளராக என் பங்கையும், என் சிந்தனைகளையும் விதர்பா சாஹித்ய சங்கத்துக்குத் தெரியும். சரஸ்வதியின் உருவப்படம் மேடையில் இருக்கும் என என்னிடம் கூறப்பட்டது. என் மதிப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டு என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பணிவோடு இந்த விருதை மறுத்தேன்" என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
"ஏன் இதுபோன்ற நிகழ்வுகளில் சாவித்ரி பாய் பூலேவின் படமோ அல்லது இந்திய அரசியலமைப்பின் படமோ வைக்கப்படவில்லை" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளர் யஸ்வந்த் மனோகர்.
 
சரஸ்வதியின் படத்தை வைப்பதற்கு யஸ்வந்த் மனோஹர் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாங்கள் எங்கள் வழக்கத்தை மாற்றிக் கொள்ளமாட்டோம் என விதர்பா சாஹித்ய சங்கத்தின் தலைவர் மனோகர் மஹிசால்கர் பிபிசி மராத்தி சேவையிடம் கூறினார்.
 
மேலும் "நாங்கள் எழுத்தாளர் யஸ்வந்த் மனோகரின் கொள்கைகளை மதிக்கிறோம். அவர் தன்னுடைய கொள்கைளை விட்டுக் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் அவரும் எங்களின் வழக்கங்களை மதிக்க வேண்டும். எங்கள் சங்கத்தின் இலச்சினையிலேயே 'விதர்பா (மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பிராந்தியம்) சரஸ்வத்களின் நிலம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
 
சரஸ்வதியை நாங்கள் ஒரு அடையாளமாக பார்க்கிறோம். எனவே இது கடவுள்களைப் பற்றியது அல்ல. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக உருவப்படத்தின் முன்பு விளக்கேற்றுவோம், அவ்வளவுதான்" எனக் கூறினார் மஹிசால்கர்.
 
இந்த நிலையில், சரஸ்வதிக்கு பதிலாக, சாவித்ரிபாய் பூலேவின் படத்தையும், இலக்கிய அல்லது பொது நிகழ்வுகளில் அரசியலமைப்பின் நகலையும் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு அனைத்து கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக யஸ்வந்த் மனோகர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்