மகா முத்ரா ஆசனம் பற்றி தெரிந்துகொள்வோம்

யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருசேர பலன் கிடைக்க செய்யப்படும் பயிற்சியாகும்.


 


யோகா செய்பவர்கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல், புகையிலைப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் உணவு முறையிலும் சீரான கட்டுப்பாடு இருக்க வேண்டும். யோகாசனம் செய்வதற்கு முன்பு மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆகையால் காலை வேளையில் யோகா செய்வது நல்லது.
 
சிலர் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களைப் பார்த்து யோகா செய்வார்கள். பின்னர் நேரமில்லை என அதனைத் தொடராமல் விட்டுவிடுவார்கள். யோகம் என்பது ஒருகலை. அதனை தெய்வக்கலையாக எண்ணி தினமும் செய்துவந்தால் மனமும் உடலும் சிறந்த ஆரோக்கியம் பெறுவது திண்ணம்.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகாவில் மகாமுத்ரா ஆசனம் பற்றி தெரிந்துகொள்வோம். மகா முத்ரா உட்கட்டாசனத்திற்கு மாற்று ஆசனமாகும்.
 
செய்முறை:
 
முதலில் விரிப்பின் மீது அமர்ந்து கால்களை மண்டியிட்டு பின் வஜ்ராசன நிலைக்குச் செல்ல வேண்டும்.
 
கைகளை முதுகின் பின்புறம் படத்திலுள்ளபடி உள்ளங்கையை வெளியில் காட்டியபடி வைத்துக்கொள்ள வேண்டும்.
 
முன்புறமாக குனிந்து தலையை தரையில் தொடும்படி குனிய வேண்டும். அப்போது கால் பகுதிக்கு அருகில் கைகள் இருக்க வேண்டும்.
 
மூச்சு சாதாரண நிலையில் இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும்.
 
பயன்கள்:
 
* முதுகுத்தண்டு வளைவதால் கீழ்முதுகுத் தண்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும். 
 
* உடலானது மூன்று மடிப்புகளாக வளைவதால் உடலின் விரைப்புத்தன்மை குறையும்.
 
* தொடைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். தொப்பையைக் குறைக்க இதுவே சிறந்த ஆசனமாகும்.
 
* நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு சுவாசப் பைகளை பலப்படுத்தும்.
 
* மனச் சஞ்சலம் நீங்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். கருப்பை பலப்படும்.
 
குறிப்பு:
 
கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தை தவிர்ப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்