யோகா என்ற சொல் வடமொழி வேர்ச்சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இதற்கு சங்கமம் என்ற பொருளும் ஒன்று கலத்தல் என்ற பொருளும் உண்டு.
உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.
இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த ஆன்மீக மார்க்கமாகும். நாம் அறியாத சாலைகளில் நடந்து செல்லும்போது நம் இலக்கை அறிய சாலையில் உள்ள வழிகாட்டிகளை பின்பற்றிச் செல்வோம், அது போலவே ஆன்மீக வாழ்வில் இலக்கை எட்ட யோகாவின் குறிகளை பின்பற்றவேண்டியது அவசியம். அந்த குறிகளில் மூன்றுதான் சுகாதாரமான வாழ் நெறி, அற நெறி, ஒழுக்க ரீதியான சுயக் கட்டுப்பாடு ஆகியனவாகும்.
இந்த மூன்று விதிகளையும் கடைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் அசாத்தியமானது. இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் எந்த ஒரு மனிதனும் தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இது நமது ஆன்மீகச் சிந்தனையை திறக்கும். மனமும், ஆன்மாவும் ஒத்திசைவு கொண்டால், உடலும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்கும்.
யோக மார்க்கத்தை கடைபிடிக்க துவங்கினால் நாளடைவில் ஒருவர் தனது மன நிலையில் ஏற்படும் அதிசய மாற்றங்களை நன்றாக உணர முடியும். மாறும் வாழ் நெறி இந்த மாற்றங்களை நமக்கு அறிவுறுத்தும்.
யோகாவின் அடிப்படை :
யோக மார்க்கத்திற்கு இரண்டு அசைக்க முடியாத அடிப்படைகள் உண்டு. அவை பௌதிகம் மற்றும் ஆன்மீகம். பெளதிக மட்டத்தில் ஆசனங்கள், கிரியைகள், பிராணாயாமங்கள் ஆகியவற்றுடன் 4 முத்திரைகளும் உள்ளது. இந்த யோகப் பயிற்சிகளை முறையாக பயிற்சி செய்தால் உடலையும் அதனுடன் மனத்தையும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தயார்படுத்தும்.
ஆன்மீக வெளிப்பாடு என்பது சுய அறிதல் மற்றும் மனக் கட்டுப்பாடு. இவற்றை அடைந்ததற்கான மூர்த்திகரமே யோகா குரு என்பவர்.
இந்த யோகா சானல் மூலம் 30 யோகாசனங்களுக்கான செய்முறையை படிப்படியாக அளிக்கவுள்ளோம். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய யோகாசனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.