நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாம்பு மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக சீன மருத்துவ ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை கட்ட சீன அரசு பணிகளை முடுக்கியுள்ளது.
சீனா மட்டுமல்லாமல் ஜப்பான், கொரியா, தாய்லாந்து என வைரஸின் தாக்கம் பல நாடுகளில் காணப்படுகிறது. இதனால் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரும் அச்சுறுத்தும் வைரஸ் தாக்குதலாக இது இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.