அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தை சேர்ந்த 31 வயது பெண் ஆண்ட்ரியா செர்ரானோ. இவர் அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனுடன் சில காலமாக பழகி வந்துள்ளார். நல்ல நெருக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆண்ட்ரியா கர்ப்பமான நிலையில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள ஆண்ட்ரியாவுக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. அதை சுட்டிக்காட்டி தனது குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு தண்டனை காலம் குறைக்கப்பட வேண்டும் என ஆண்ட்ரியா நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் அவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் “என் மகன் 13 வயது குழந்தையாக உள்ளபோதே ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டார். எனது மகனின் குழந்தை பருவம் திருடப்பட்டு விட்டது. இனி அவன் இந்த நிலையிலேயே மீதமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். ஆனால் ஒருவேளை ஆண்ட்ரியா ஒரு ஆணாக இருந்து, எனது மகன் வயதில் ஒரு சிறுமி அந்த இடத்தில் இருந்திருந்தால் இந்த வழக்கு நிச்சயம் வேறுபட்டு இருக்கும். பெண் என்பதற்காக ஆண்ட்ரியாவுக்கு இரக்கம் காட்டுகிறார்கள்” என கூறியுள்ளார்.