ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அரசு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பெண் கல்வி, பெண் சுதந்திரம் உள்ளிட்ட பலவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இதனால், உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பெண்கள் வீட்டின் சமையலறை மற்றும் முற்றத்தில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது குற்றச்செயல் என்றும், இனிமேல் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜன்னல்கள் வைக்க கூடாது என்றும் தாலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் சமையலறை மற்றும் முற்றம் பகுதியில் ஜன்னல்கள் இருந்தால், அவற்றை சுவர் எழுப்பி பார்க்க முடியாத வகையில் மூட வேண்டும் என்றும், இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண் கல்வி, பெண் வேலை, பேச்சு சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஜன்னல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.