மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது: சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

செவ்வாய், 15 அக்டோபர் 2019 (21:36 IST)
சதீஷ் பார்த்திபன்
 
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அந்த சர்ச்சையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
 
மலேசியாவில் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் இது பரபரப்பையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
 
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கையைப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனை திசைதிரும்பும் வகையிலேயே இந்த புதிய விவகாரம் திட்டமிட்டு எழுப்பப்பட்டுள்ளதாக சிலர் மலேசிய அரசை மறைமுகமாக விமர்சிக்கின்றனர்.
 
இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசியாவில் ஏராளமான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
 
இது குறித்து கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துணை ஆணையர் டத்தோ அயோப் கான், விடுதலைப் புலிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் மலேசியாவில் உள்ள ஆதரவாளர்கள் இந்த நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
 
எனினும் இந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை மலேசிய போலீஸார் வெளியிடவில்லை.
 
மலேசிய போலீஸ்
 
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் 12 பேரை மலேசியப் போலீசார் கைது செய்தனர். அவர்களில் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
 
இந்நிலையில், கைதானவர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது தெரிய வந்ததாக டத்தோ அயோப் கான் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
"கைதான தனி நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது பெருந்தொகைகளை உள்ளடக்கிய பரிமாற்றங்கள் நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம். மேலும் அவர்களுடைய கைபேசிகளில் இருந்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது எல்டிடிஈ தலைவர்களின் படங்கள், இயக்கக் கொடிகள், சுவரொட்டிகள் பறிமுதல் ஆகியுள்ளன.
 
மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது.
 
எனவேதான் இதை தடுத்து நிறுத்தும் வகையில் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கும், குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியை குறிவைத்து காவல்துறை செயல்படுவதாகக் கூறப்படுவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட விஷயம்," என்றார் டத்தோ அயோப் கான்.
 
கடந்த 1990களில் இருந்தே இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென தற்போது மலேசியப் போலீஸார் நடவடிக்கை எடுப்பது ஏன்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மலேசியாவில் புதிய அலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்பாடுகளை அனுமதிக்க இயலாது என்றும் அயோப் கான் தெரிவித்தார்.
 
"இலங்கைத் தமிழர்களுக்காக பரிதாபப்படுவது குற்றச்செயல் ஆகாது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பது தவறு. எல்டிடிஈ பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அந்தக் குழுவை ஆதரிக்க வேண்டும்?," என்றும் அயோப் கான் கேள்வி எழுப்பினார்.
 
எல்டிடிஈ குறித்த விசாரணையை நிறுத்தச் சொன்னாரா மலேசிய நிதி அமைச்சர்?
 
மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனநாயக செயல் கட்சியை (ஜசெக) சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கட்சி மலேசியாவின் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகும்.
 
கூட்டணி அரசின் அதிரடி நடவடிக்கையால் ஜனநாயக செயல் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜசெக தலைவரும், மலேசிய நிதி அமைச்சருமான குவான் எங் தெரிவித்துள்ளார்.
 
கைதானவர்கள் மீது சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தகுந்த ஆதாரங்கள் இருப்பின் சட்ட ரீதியில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவரும் இனி கைது செய்யப்பட மாட்டார்கள் என காவல்துறை உறுதி அளித்திருப்பதாகவும் அவர் இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
 
ஆனால் போலீஸார் எல்டிடிஈ குறித்து விசாரணை மேற்கொள்ளக் கூடாது என குவான் எங் வலியுறுத்தி இருப்பதாக செய்தி வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
"நான் ஏன் காவல்துறை விசாரணையைத் தடுத்து நிறுத்த வேண்டும்? எங்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நான் வெளியிட்ட அறிக்கையை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த ஒருபோதும் முனைந்தது இல்லை," என்று அமைச்சர் குவான் எங் தெளிவுபடுத்தி உள்ளார்.
 
மத்திய அரசில் ஜனநாயக செயல் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ளது என்ற காரணத்துக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான விசாரணையை காவல்துறை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என டத்தோ அயோப் கானும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 
விசாரணையை நிறுத்துமாறு அமைச்சர் குவான் எங் வலியுறுத்தவில்லை என்று அவரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
பினாங்கு ராமசாமி
 
அதே சமயம், விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக ஜசெக தலைவர்கள் யாரும் இனிமேல் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவலை குவான் எங் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
 
இந்நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை திடீரென மலேசிய அரசு கைது செய்துள்ளது ஜனநாயக செயல் கட்சித் தலைமைக்கு மிகுந்த அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாகவே மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சொஸ்மா சட்டத்தை எதிர்க்கும் ஆளும் கூட்டணி எம்பிக்கள்
 
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ள குற்றச்சாட்டின் பேரில் ஆகக் கடைசியாக, ஓர் ஆசிரியர், மாநில அரசுத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் மூலம் இந்த விவகாரத்தில் மலேசிய காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதியாகி உள்ளது.
 
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 
சொஸ்மா உள்ளிட்ட ஆறு கடுமையான சட்டங்கள் நீக்கப்படும் அல்லது அவற்றில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.
 
இந்நிலையில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளே சொஸ்மா சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர். இதையடுத்து கைதாகியுள்ள அக்கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களான சாமிநாதன், குணசேகரன் ஆகிய இருவரையும் பிணையில் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.
 
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம் கர்ப்பால் சிங், ஆர்.எஸ்.என்.ராயர் ஆகிய இருவரும் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
இரு சட்டமன்ற உறுப்பினர்களும் சொஸ்மா - (பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 - Special Offences (Special Measures) Act 2012, or Sosma) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தவறு என்று நீதிமன்றத்தில் வாதிடப் போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
காவல்துறையின் நடவடிக்கைக்கு மலேசியப் பிரதமர் மகாதீர் ஆதரவு
 
மலேசியப் பிரதமர் மகாதீர்
 
இந்நிலையில், சொஸ்மா சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு மலேசியப் பிரதமர் துன் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு தரப்பையும் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் மலேசிய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
மலேசிய காவல்துறை சட்ட விதிகளின் படியே செயல்பட்டிருப்பதாகவும், அரசின் தலையீடு இன்றி கைது நடவடிக்கையை காவல்துறை சுதந்திரமாக மேற்கொண்டு இருப்பதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டினார்.
 
"ஏன் இவ்வாறு (புலிகள் ஆதரவு நடவடிக்கைகள்) நடக்கிறது என்பதை அறிய அரசு விரும்புகிறது. நான் யாரையும் கைது செய்யவில்லை. அதேபோல் உள்துறை அமைச்சரும் யாரையும் தடுத்து வைக்கவில்லை. காவல்துறைதான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள்தான் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுகின்றனர். கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து காவல்துறை என்னிடம் விவரித்துள்ளது. இதன் பின்னணியில் உரிய காரணங்கள், போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நம்புகிறேன்," என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், மகாதீரை அடுத்து மலேசியப் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கருதப்படும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், மலேசிய போலீஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், எந்த வகையில் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
 
அதே சமயம், சந்தேக நபர்கள் மீது சொஸ்மா சட்டம் திணிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
ஜாகிர் நாயக் குறித்தும் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் - பினாங்கு ராமசாமி
 
ஜாகிர் நாயக்
 
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதானவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை மலேசிய அரசு தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மை எனில் ஜாகிர் நாயக் குறித்தும் அத்தகையதொரு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி வலியுறுத்தி உள்ளார்.
 
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்து சண்டையிட்டவர்கள் மற்றும் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 1எம்டிபி ஊழல் குறித்தும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் கோலாலம்பூரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் தொடர்புள்ளதா?அனைத்துலக பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்புள்ளதா? என்றும் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
விடுதலைப் புலிகள் இயக்கமானது கடந்த 2009ஆம் ஆண்டிலேயே அழிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த இயக்கம் மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தும் என்பது அபத்தமான கூற்று என்று தெரிவித்துள்ளார்.
 
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களைக் கொன்றதன் மூலம் புலிகள் அமைப்பின் போராட்டம் முடிவடைந்தது என்றும், மலேசியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ புலிகள் புத்துயிர் பெறுவார்கள் என்று கருதுவது சரியல்ல என்றும் ராமசாமி கூறியுள்ளார்.
 
ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாக ஜசெக குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலை புலிகள் (கோப்புப்படம்)
 
இதற்கிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள மலேசிய காவல்துறை, அடுத்தக் கட்டமாக மத போதகர் ஜாகிர் நாயக் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) பினாங்கு மாநில இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.
 
தமது தாய்நாடான இந்தியாவில் ஜாகிர் நாயக் எதிர்கொள்ளும் பணமோசடி குற்றச்சாட்டுக்கும், பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஜசெக இளைஞர் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
 
"ஜாகிர் நாயக் இளைஞர்களை தீவிரவாதம் நோக்கிச் செல்வதற்குத் தூண்டுகிறார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இது வங்க தேசம் மற்றும் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதை அறியவில்லையா?
 
நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஜாகிர் நாயக் போன்ற சக்திகளைச் சார்ந்து இருக்காமல், மலேசியாவை இது போன்ற நபர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்," என்று ஜசெக இளைஞர் பிரிவு வலியுறுத்தி இருப்பதாக மலேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
 
சொஸ்மா சட்டத்தை பயன்படுத்தியதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
இதற்கிடையே, சொஸ்மா சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களில் ஒருவராக உள்ள போதிலும், அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நீதிமன்றத்தில்தான் குற்றம்சாட்டப் பட்டிருக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
 
கைதானவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
"ஈழப் போரில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக் கணக்கானோர் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர். உலகெங்கிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கு அனுதாபம் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.
 
அனுதாபம் காட்டப்படுவதால் அவர்கள் தீவிரவாதிகள் என கருதப்படக் கூடாது. மேலும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது," என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
சொஸ்மா சட்டத்தின் கீழ், இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்திருக்கக் கூடாது என்று வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
"சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால், அவர்களை அழைத்து விசாரித்திருக்கலாம். மாறாக சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது," என்று அம்பிகா கூறியுள்ளார்.
 
மலேசியாவில் நுழைய சீமானுக்கு தடை விதிக்கப்படுமா?
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
 
விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் சீமானுக்கு தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்திற்கு மலேசியாவில் புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு அவரது ஆதரவு இருப்பதும் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் டத்தோ அயோப் கான் எச்சரித்துள்ளார்.
 
"சீமான் பலமுறை மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இங்குள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அவரது வருகையின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்.
 
"புலிகள் அமைப்புக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளில் அவருக்கும் பங்களிப்பு இருப்பது தெரிய வந்தால் அவர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என குடிநுழைவுத் துறையிடம் கேட்டுக் கொள்வோம்," என்று டத்தோ அயோப் கான் மேலும் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதால் மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவில் நுழைய முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அச்சமயம் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் தலையீட்டால் அத்தடை விலக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
 
இந்நிலையில், மலேசிய காவல்துறையின் பார்வை தற்போது சீமான் மீது பதிந்திருக்கிறது.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட சிலர் முயற்சி மேற்கொள்வதாக மலேசிய காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், ஆயுதங்களுடன் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனால் இந்த விவகாரம் அடுத்தக்கட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்