ஓடும் பேருந்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தமிழக வாலிபருக்கு சிறை

புதன், 1 ஏப்ரல் 2015 (07:34 IST)
சிங்கப்பூரில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
 
சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், சீதாராமன் ரமேஷ். தமிழ்நாட்டை சேர்ந்த இருக்கு வயது 32.
 
இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி அங்கு ஒரு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த 39 வயது பெண் பயணி ஒருவரை, அவரது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு, தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து அந்தப் பெண், காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில், அவர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
 
இந்நலையில், இந்த வழக்கு சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி ஜஸ்வந்தர் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சீதாராமன் ரமேஷ் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
 
இந்த வழக்கு விசாரணையின்போது அவரது வழக்குறைஞர், முகமது பைரோஸ், "எனது கட்சிக்காரர் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. அவர் தனது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவார்.
 
அவர் சிங்கப்பூருக்கு வந்த நோக்கம் அடிபட்டுப்போகும். அவர் ஏராளமான கடனில் உள்ளார். எனவே அவர் மீது கருணை காட்டி குறைவான தண்டனை வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 3 வாரகால சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்