ஈராக் எல்லையில் 30 ஆயிரம் வீரர்கள் குவிப்பு - சவூதி அரேபியா அதிரடி நடவடிக்கை

வெள்ளி, 4 ஜூலை 2014 (12:30 IST)
ஈராக் எல்லையில் 30 ஆயிரம் வீரர்களை குவித்து சவூதி அரேபியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி கடந்த ஒரு மாதமாக கடுமையாக சண்டையிட்டு, முக்கிய நகரங்களை பிடித்து வருகின்றனர். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டும், அமெரிக்கா இன்னும் ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
 
கடந்த வாரம், தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க மன்னர் அப்துல்லா சபதம் செய்திருந்த நிலையில் இந்த தொலைபேசி பேச்சு நடந்துள்ளது.
 
தொலைபேசி பேச்சின்போது, ஈராக்கில் தீவிரவாதிகள் கை ஓங்கி வருவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், ஈராக்கில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சவூதி அரேபியா 500 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருப்பதற்கு ஒபாமா நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
 
இதற்கிடையே ஈராக் எல்லையில் சவூதி அரேபியா 30 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. ஈராக் தனது படைகளை அங்கிருந்து திரும்பப்பெற்ற நிலையில், சவூதி அரேபியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
ஈராக்குடன் சவூதி அரேபியா 800 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த தகவல்களை வெளியிட்ட அல்அரேபியா டி.வி., “ஈராக், சிரிய எல்லைகளை பாதுகாப்பற்ற நிலையில் விட்டு விட்டு, ஈராக் படைகள் தங்கள் நிலைகளை கைவிட்டு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சவூதி அரேபிய வீரர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்” என கூறியது. எல்லையிலிருந்து 2,500 ஈராக் வீரர்கள் திரும்பிச்சென்ற வீடியோ காட்சிகளையும் இந்த டெலிவிஷன் ஒளிபரப்பியது.

வெப்துனியாவைப் படிக்கவும்