ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி?
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (21:16 IST)
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் மூலம் தரையிறங்கினர்.
ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில், மனிதர்களை இட்டுச் செல்லும் விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ரஷ்யத் துணைப் பிரதமர் போரிசோவ் அறிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.
இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்ட இந்த ட்வீட்.
திட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும். கஜகஸ்தானின் பைக்கானோர் காஸ்மோட்ராமில் இருந்து இந்த ராக்கெட் புறப்பட்ட 90 விநாடிகளுக்குப் பிறகு, அதில் கோளாறு இருப்பதை உள்ளே இருந்த விண்வெளி வீரர்கள் உணர்ந்துள்ளனர்.
ஏவப்பட்டபோது, ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் உள்ள விண்வெளி வீரர்கள் அதில் இருந்து பேலிஸ்டிக் இறங்கு வாகனம் மூலம் புவிக்குத் திரும்பியதாகவும் 'நாசா' தெரிவித்துள்ளது. பேலிஸ்டிக் இறங்கு வாகனம் என்பது, சாதாரண நேரத்தைப் போல சாய்வாக இறங்காமல் அதிக செங்குத்துக் கோணத்தில் சரேலென தறையிறங்கும் ஒன்று.
விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு பாதிப்பா?
2011ல் அமெரிக்காவில் விண்வெளி ஓடத் திட்டங்கள் முடிவுக்கு வந்த பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யாவின் சோயுஸ் மூலம் அமெரிக்கா அனுப்பி வந்தது. இதில் அமெரிக்க வீரருக்கு ஒதுக்கப்படும் இருக்கைக்கு அந்த நாடு பணம் செலுத்தியும் வந்தது.
இந்த ராக்கெட் பயணம் எதிர்பாராத முடிவுக்கு வந்ததால் சர்வதேச விண்வெளி நிலையத்திலே ஏற்கெனவே உள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; அவர்களுக்கு போதிய அத்தியாவசியப் பொருகள்கள் இருப்பு உள்ளன என்று பெயர் குறிப்பிடாத நபர்களை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அலசல்: தப்பித்து புவிக்கு வருவது கடும் பயணம்
சோயுஸ் ராக்கெட் மிகப் பழமையான ராக்கெட் வடிவமைப்பு என்றபோதும் இது பாதுகாப்பானது என்கிறார் பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ்.
மேலே ஏறுகிற ராக்கெட் காலியான தமது எரிபொருள் கட்டங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது என்று கூறிய அவர், ராக்கெட்டில் இருந்த விண்வெளி வீரர்கள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கவேண்டிய நேரத்தில் அவர்கள் எடை இழந்ததாக உணர்ந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
எனவே ராக்கெட்டில் ஏதோ சரியில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் ஜொனாதன். இதுபோன்ற தருணங்களில் பயன்படுத்துவதற்காகவே தப்பிக்க உதவும் கருவிகள் சோதித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
எனினும் அதன் மூலம் புவிக்குத் திரும்பிய இரு விண்வெளி வீரர்களின் பயணம் கடுமையானதாக இருந்திருக்கும். ஏனெனில் புவிக்கு திரும்பிய அவர்களின் பயணத்தின் வேகம் திடுமென குறைந்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
"கடந்த காலத்தில் ரஷ்ய விண்வெளித்துறை கட்டிக்காத்த தரத்தினை தற்போது பராமரிக்க முடிகிறதா என்பது குறித்து ஏற்கெனவே விவாதம் நடந்துவருகிறது. இந்த பயணத்தின் தோல்வி குறித்த ஆய்வு முடிவுகள் என்னவாக இருந்தபோதும், இந்த தரம் குறித்த கவலை அதிகரிக்கவே செய்யும்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் அமெரிக்கா புதிய ராக்கெட் அமைப்புகளை புழக்கத்துக்கு கொண்டுவருவதற்கான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டும். போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய ராக்கெட் அமைப்புகள் அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்" என்கிறார் ஜொனாதன்.