வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், தனது மகள் கிம் ஜூ ஏவை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதன் மூலம், அவர் வடகொரியாவின் அடுத்த அரசியல் வாரிசாக வரக்கூடும் என்ற ஊகங்கள் சர்வதேச அளவில் பரவலாக பேசப்படுகின்றன.
2022ஆம் ஆண்டு, கிம் ஜூ ஏ முதன்முறையாக தனது தந்தையுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவும் நிகழ்வில் பொதுவெளியில் தோன்றினார். இந்த நிகழ்வு, அவர் அரசியல் களத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான முதல் சமிக்ஞையாக கருதப்பட்டது.
அதன் பின்னர், பல ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்கும் நிகழ்வுகளிலும் அவர் தனது தந்தையுடன் இணைந்து பங்கேற்றார். இந்த நிலையில் சமீபத்தில், அவர் தனது தந்தையுடன் சீனாவுக்கு சென்றது, அவரது முதல் சர்வதேச பயணமாக அமைந்தது. இது வாரிசு அரசியலுக்கான அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிறது.
கிம் ஜூ ஏவின் வயது 12 அல்லது 13 இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013-ல் வடகொரியா சென்றபோது கிம் ஜூ ஏவை குழந்தையாக பார்த்ததாகக் கூறியுள்ளார். அவர் பியாங்யாங்கில் உள்ள வீட்டில் கல்வி கற்று வருபவர் என்றும், குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் போன்ற பொழுதுபோக்குகளில் ஆர்வம் உள்ளவர் என்றும் தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.