நடுக்கடலில் மூழ்கிய கப்பல் : 300 பேர் காணவில்லை என தகவல்

புதன், 16 ஏப்ரல் 2014 (16:08 IST)
சுமார் 477 பயணிகளுடன் சென்ற தென் கொரிய கப்பலொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நடுக்கடலில் மூழ்கிய இந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவுப்படுத்தபடாததால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விபத்திற்கான காரணம் இன்னும் சரிவர தெரியாத நிலையில், இக்கப்பலில், பயணம் செய்தவர்கள், கப்பலில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் பின் கப்பல் மெதுவாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
 
 

சுமார் 477 பயணிகளுடன் சென்ற அக்கப்பல் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் சுமார் 300 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றதாக தெரிகிறது. 
 
மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட சிறிய கப்பல்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இதுவரை சுமார் 164 பேர் காப்பாற்றபட்டுள்ளதாகவும், ஆனால் இது குறித்து உறுதி செய்யப்படாத   தகவல்கள்  வெளியாவதால் சரியான நிலை குறித்து தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்