விந்தணுக்களில் குரங்கம்மை DNA – ஆய்வில் அதிர்ச்சி!
ஞாயிறு, 24 ஜூலை 2022 (13:08 IST)
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது.
ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு…
விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. பாலியல் உறவில் பரவுகின்ற அளவு இதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியுள்ளது.
சைபில்ஸ் (Syphilis), ஹேர்ப்ஸ் (Herps) போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும். வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.