அமெரிக்க அரசியல் வரலாற்றில் என்னைவிட வேறு எந்த தலைவரும் ஊடகங்களால் அதிகளவு விமர்சனம் செய்யப்பட்டிருக்க மாட்டார், ஆனால் இந்த விமர்சனம் தான் எனது வளர்ச்சிக்கு உதவுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நேற்று நடந்த விழா ஒன்றில் குறிப்பிட்ட டிரம்ப், ' "சமீபகாலமாக என்னை ஊடகங்கள் நடத்தும் முறையைப் பாருங்கள். வரலாற்றில் என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட அரசியல் தலைவர் எவரும் இல்லை. ஆனால் இதனால்தான் நான் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் நெருக்கடிகள்தான் நம்மை வலுவடையச் செய்கின்றன. நீங்கள் எடுத்த முயற்சியிலிருந்து பின் வாங்காதீர்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை யார் தடுத்தாலும் நிறுத்தாதீர்கள்.
நான் அதிபராக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். மதிப்பு கூடிய எதுவும் எளிதாக கிடைத்துவிடாது. அதற்கு நீங்கள் சண்டையிட வேண்டும், தொடர்ந்து சண்டையிடுங்கள். தளர்ந்துவிடாதீர்கள். நான் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களுக்காக அல்ல" என்று ஊடகங்களை சற்று காட்டமாக டிரம்ப் விமர்சித்துள்ளார்.