புனேவை சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளிநாட்டு குழந்தையைத் தத்தெடுக்க முயற்சி செய்த நிலையில், அதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு குடியுரிமை கொண்ட குழந்தை உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்று இது குறித்த வழக்கில் நீதிபதி தெரிவித்து, வெளிநாட்டு குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தார்.
புனேவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், தங்கள் சகோதரியின் மகன் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், அவருடைய மகனை தத்தெடுக்க உள்ளதாகவும் இதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
குழந்தை தற்போது இந்தியாவில் தான் பள்ளியில் படிப்பதாவும், ஒவ்வொரு ஆண்டும் விசா புதுப்பிக்க அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய இருப்பதாகவும், அவ்வாறு செய்ய தவறினால் இந்தியாவில் அவர் சட்டவிரோதமாக குடியேறியவராக மாறக்கூடும் என்றும், எனவே குழந்தையின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தத்தெடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தம்பதியின் வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், மனுதாரரின் இக்கட்டான சூழ்நிலைக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்தாலும், அது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டது என்றும், அமெரிக்க சட்டங்களின் கீழ் தத்தெடுத்தால் மட்டுமே தத்தெடுப்புக்கு அனுமதி அளிக்க முடியும்" என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனை அடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, "அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரருக்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும் இல்லை என்றும், அந்தக் குழந்தை இந்திய பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார்.