உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஐந்தாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தொழில்களுக்கும், பொது போக்குவரத்துக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கை குறைப்பது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வரும் நிலையில் நோமுரா பகுப்பாய்வு நிறுவனம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் தளர்வுகள் அளிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படுவதால் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக 15 நாடுகளை பட்டியலிட்டுள்ளனர். அந்த 15 நாடுகளின் பட்டியலில் இந்தோனிசியா, சிலி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இந்த நாடுகளில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்புகள் அதிகரித்த பிறகு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் எழலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.