இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைபாட்டை பிரான்ஸ் அறிவித்திருப்பது இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்தி அமைதியை கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
ஆனால் அமெரிக்காவின் செயல்பாடுகள் காசாவையும் மொத்தமாக பறித்து இஸ்ரேலிடம் ஒப்படைத்து பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கும் வகையில் உள்ளதாக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதன் வாயிலாகவே இந்த பிரச்சினையை அமைதியை நாட முடியும் என பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக சமீபத்தில் பதிவிட்ட அவர் “மத்திய கிழக்கில் ஒரு நீதியுடன் கூடிய நீடித்த அமைதிக்கான தொடக்கத்தை உருவாக்க பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது” என அறிவித்துள்ளார். இது இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் செப்டம்பரில் ஐ.நாவில் இதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு “பிரான்ஸின் இந்த அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிப்பதாக உள்ளது. இது ஈரானுக்கு ஆதரவாக மற்றொரு பினாமி நாட்டை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இஸ்ரேலை அழிப்பதற்கு பாலஸ்தீன நாடு ஒரு ஏவுதளமாக செயல்படும். பாலஸ்தீனர்கள் தங்களுக்கு ஒரு நாட்டை தேடவில்லை. அவர்கள் இஸ்ரேலுக்கு பதிலாக ஒரு நாட்டை உருவாக்க பார்க்கிறார்கள்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K