கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. நோய் தாக்கம், உயிர் பலிகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார சரிவுகள் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. போர்க் காலங்களில் ஏற்படுவதை விட பொருளாதார ரீதியான சரிவு தற்சமயம் அதிகரித்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். பல நாடுகள் இழந்த பொருளாதார சூழலை எட்டிப்பிடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
உலக நாடுகளுக்கு பிக் டாடியாக விளங்கி வரும் அமெரிக்காவும் தப்பவில்லை. ஆரம்ப கட்டங்களில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு தங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் மதிப்பால் அறியப்படுகிறது. அதாவது வளைகுடா நாடுகளில் இருந்து விற்பனையாகும் கச்சா எண்ணெய் பேரல்கள் அனைத்து டாலர்கள் விலையிலேயே மதிப்பிட படுகின்றன.
பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் வாகன பயன்பாடுகளில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாய் இருந்தும், விற்பனை இல்லாததால் WTI நிறுவனத்தின் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு பூஜ்ஜியத்துக்கும் கீழ் குறைந்து -39.14 அமெரிக்க டாலர்களாக மாறியுள்ளது. எனினும் வேறு சில நிறுவனங்களில் பேரல் விலை அதிகபட்சமாக 25 டாலர் வரை உள்ளது. தொடர்ந்து ஊரடங்கு நிலவும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் வரலாற்றிலேயே அதன் மதிப்பு பூஜ்ஜியத்திற்கும் கீழ் சென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.