ஏமனை சூறையாடும் காலரா; பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிப்பு

சனி, 23 டிசம்பர் 2017 (18:27 IST)
ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

 
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு புரட்சிப் படையினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவியது. 
 
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்களியுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏமனில் சுமார் 10 லட்சம் மக்கள் கலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 76 லட்சம் மக்கள் காலரா பாதிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் வாழும் மொத்த மக்கள்தொகையான 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்