இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைப்பு: வங்கதேசம் அதிரடி முடிவு..!

Mahendran

வியாழன், 3 அக்டோபர் 2024 (14:05 IST)
இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதர்களை வங்கதேச அரசு அதிரடியாக திரும்ப அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தின் வெளிநாட்டு அலுவல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் தகவலின்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், பெல்ஜியம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதர்கள் உடனடியாக டாக்காவிற்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைவரும் தங்களது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரிட்டன் தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து நாடுகளின் தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நீடித்த வன்முறைகள் காரணமாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த 5 நாடுகளின் தூதர்களை திரும்ப அழைப்பதற்கான காரணம் குறித்து வங்கதேசம் இதுவரை விளக்கம் அளிக்காதது குறிப்பிடத்தக்கது, இது ஒரு புதிராக உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்