முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசுப்பணி முடக்கம் – பணிந்தார் டிரம்ப் !

சனி, 26 ஜனவரி 2019 (16:18 IST)
அமெரிக்காவில் கடந்த ஒரு மாதக் காலமாக தொடர்ந்து வந்த அரசுப்பணி முடக்கத்தை அதிபர் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிரடி நடவடிக்கைகள் என்றால் அதில் சில முட்டாள்தனமான நடவடிக்கைகளும் அடக்கம், வெளிநாட்டவருக்கு விசா மறுப்பது, எதிரி நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பது, அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்றவை சில உதாரணங்கள். அதனால் அமெரிக்காவிலும் மற்ற உலக நாடுகளிலும் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மெக்சிகோவில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லையில் எல்லைச்சுவர் கட்டும் கோரிக்கையை முன்வைத்தார் ட்ரம்ப். இந்த திட்டத்திற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கவேண்டுமெனெவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் இதுவரை நிறைவேறவில்லை.

இதனால் கடந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. அத்தியாவசியத் தேவைகளுக்கான துறைகள் தவிர பெரும்பாலான துறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரசுப்பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை முடிவெடுத்து அதில் அதிபர் ட்ரம்ப்பை கையெழுத்திட வைத்துள்ளனர். இதனால் அமெரிக்க வரலாற்றில் நீண்ட நாட்களாக இருந்த அரசுப்பணி முடக்கம் இப்போது முடிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்