கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா பிரான்ஸில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸில் 1975 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இணையத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பேச்சு தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு கருக்கலைப்பு பெண்களின் உரிமை என போராடும் ஒரு தரப்பினர் பேராதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள ஈபிள் டவர் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.