ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ள நாடு லிபியா. கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போரால் சிதைவுற்று இருக்கும் லிபியாவின் கிழக்கு பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கையிலும், மேற்கு பகுதிகள் வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற அரசின் கையிலும் உள்ளன.
உள்நாட்டு போரால் ஏற்கனவே பல பேர் இறந்து போயுள்ள நிலையில் லிபியாவை இயற்கையும் சோதித்து இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவான வலுவான டேனியல் புயல் லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்கியுள்ளது. புயலுடன் கனமழையும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து கொண்டு லிபியாவை புரட்டிப் போட்டுள்ளது.
லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பெரிய பெரிய கட்டிடங்களே சின்னாபின்னமாகி உள்ளன. வெள்ளத்திற்கு முன்பும், பின்பும் டெர்னாவில் நிலை குறித்து வெளியாகியுள்ள சேட்டிலைட் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.