மியான்மரில் சிறையில் கலவரத்தை உண்டாக்கி 41 கைதிகள் தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் லிபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சுமார் 400 கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அதேபோன்று மியான்மரில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தி சிறையிலிருந்து தப்பித்து செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று அவர்கள் கலவரத்தை உண்டாக்கினார்கள்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை காவலர்கள் தடுத்தனர். ஆனால் கைதிகள் காவலர்களை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர் 41 கைதிகள் தப்பியோடியிருப்பதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். இச்சம்பவம் மியான்மரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.