109 மைல் வேகத்தில் சூறாவளி புயல்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு

வெள்ளி, 27 டிசம்பர் 2013 (19:36 IST)
இங்கிலாந்தில் ஏற்பட்ட கடுமையான புயலின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, மின் வெட்டு மற்றும் 109 மைல் வேகத்தில் வீசும் காற்று ஆகியவற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
FILE

அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை, 52 புயல் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டும் 157 வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தும் மக்களை உஷார்படுத்தியது. ஆனாலும் இப்புயலினால் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அங்கு பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் சாலை மார்க்கங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய லண்டன் பகுதியில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்புயல் காரணமாக அந்நாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்கள் விழா கால விடுமுறையை நீட்டித்து தங்கள் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

பேடிங்கடன் ரெயில் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட 80 நிமிடங்கள் தாமதமாக ரெயில்கள் வந்ததால் மக்கள் அனைவரும் கோபத்துடன் காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட 38000 வீடுகள் மின்சாரமின்றி தவித்த நிலையில் நேற்றிரவு வரை 25000 வீடுகளை மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ள 13000 வீடுகளுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்