தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்

சனி, 28 டிசம்பர் 2013 (17:31 IST)
FILE
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதர் ஜெய்சங்கர், அமெரிக்க அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

மேலும், தேவயானி கைது செய்யப்பட்டது குறித்த இந்தியாவின் கடும் கண்டனத்தையும், அவரது வீட்டில் வேலை செய்த சங்கீதா ரிச்சர்டு குடும்பத்தினரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றியதற்கு கடும் ஆட்சேபத்தையும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக தாம் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை அதற்குரிய அலுவலக அதிகாரியிடம் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை வழங்கினார். பின்னர், அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரப் பிரிவு செயலாளர் வென்டி ஷேர்மன் மற்றும் நிர்வாகப் பிரிவு செயலாளர் பேட்ரிக் எஃப் கென்னடி ஆகியோரை அவர் சந்தித்தார்.

பரிசீலனை செய்யப்படும்: இதனிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே தேவயானி ஐ.நா. தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்ததாக இந்தியா தற்போது கூறியுள்ளது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறினார்.

ஐ.நா. சபைக்கான இந்தியத் தூதரகத்தின் நிரந்தர ஆலோசகராக தேவயானி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி நியமிக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால், கைது நடவடிக்கையின்போதே தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு இருந்ததும், அவரை தனிப்பட்ட முறையில் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ முடியாது என்ற அந்தஸ்து இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அதைமீறி, அமெரிக்க அரசு டிசம்பர் 12-ஆம் தேதி தேவயானியை கைது செய்து காவலில் வைத்தது நினைவுகூரத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்