1998 -இல் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குனர், டாம் டீக்வர் இயக்கிய திரைப்படம், ரன் லோலா ரன். இந்தப் படம் வெளியான போது உலகம் முழுவதும் இந்தப் படம் பேசும் பொருளாக ஆனது.
ஒரு சம்பவம் நடந்த பிறகு, இதை இப்படி செய்திருக்கலாமே, இப்படி நடந்திருக்கலாமே என்று நமக்கு பலமுறை தோன்றியிருக்கும். ஆனா, நம்முடைய வாழ்க்கையில் ஒன்று நடந்தால் நடந்ததுதான். ஒன்று கடந்து சென்றுவிட்டால் சென்றதுதான். மனித வாழ்க்கையில் பின்னாடி சென்று பார்க்க ரிவைண்ட் பட்டனும் கிடையாது, இன்னொரு வாய்ப்பும் கிடையாது. ஒருவேளை இந்த இரண்டும் இருந்தால்...? அதுதான் ரன் லோலா ரன் படம்.
இதன் அடிப்படை கதை ஒன்று. லோலா என்கிற பெண்ணுக்கு அவளது காதலன் மானியிடமிருந்து போன் வருகிறது. அவன் லோக்கல் தாதாவுக்கு சொந்தமான பணத்தை தொலைத்துவிடுகிறான். இன்னும் 20 நிமிடங்களில் பணத்தை தாதாவுக்கு தரவில்லையென்றால் அவன் மானியை கொன்றுவிடுவான். லோலா, இருபது நிமிடங்களில் பணத்துடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு பணத்துக்காக ஓட ஆரம்பிக்கிறாள்.
அவள் முதலில் தன்னுடைய அப்பா வேலை பார்க்கும் வங்கிக்கு வந்து பணம் கேட்கிறாள். அவர் இவளை தனது மகளே இல்லை என்று சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். லோலா மானி இருக்கும் இடத்திற்கு போவதற்குள், மானி அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்க, போலீஸ் சுற்றி வளைக்கிறது. பதட்டத்தில் ஒரு போலீஸ்காரர் சுடுவது லோலா மீது பட, அவள் உயிர் துறக்கிறாள்.
இப்போது படம் முதலிலில் இருந்து ஆரம்பிக்கும். இந்தமுறை லோலா அப்பாவை துப்பாக்கிமுனையில் நிறுத்தி தனக்குத் தேவையான பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொள்கிறாள். மானி சூப்பர்மார்க்கெட்டை கொள்ளையடிப்பதற்கு முன் சரியான நேரத்துக்கு சென்றும் விடுகிறான். ஆனால், எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் ஒன்று மோத, மானி இறந்து போகிறான்.
இப்போது மீண்டும் படம் முதலில் இருந்து தொடங்குகிறது. லோலா ஓட ஆரம்பிக்கிறாள். இந்தமுறை அவள் போவதற்குள் அவளது அப்பா அவரது நண்பரின் காரில் ஏறி கிளம்பிவிடுகிறார். கேசினோ ஒன்றுக்கு வரும் லோலா இரண்டாவது ஆட்டத்திலேயே தனக்கு தேவையான பணத்தை ஜெயித்து மானியை தேடி வருகிறாள். இதனிடையில், மானியிடமிருந்து பணத்தை எடுத்த பிச்சைக்கார நபரை மானி பார்த்துவிடுகிறான். அவனை துரத்திச் சென்று பணத்தை மீட்டு, தாதாவிடம் தருகிறான். இந்தமுறை லோலா, மானி இரண்டு பேரும் இறப்பதில்லை. கூடுதலாக லோலா ஜெயித்த பணமும் அவர்களுக்கு கிடைக்கிறது.
மேலோட்டமாக கதையைச் சொன்னாலும் இந்தப் படம் நெடுக சின்னச்சின்ன விஷயங்கள் கொட்டி கிடப்பதைப் பார்க்கலாம். லோலா ஒவ்வொருமுறை ஓடும் போதும், எதிரில் வரும் நபர்களின் எதிர்கால வாழ்க்கை போட்டோ ஷாட்களாக சில நொடிகளில் வந்து போகும். ஒவ்வொருமுறை லோலா ஓடும்போதும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் மாற்றம் இருப்பதை நாம் பார்க்க முடியும். இதேபோல் ஏராளமான விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளது.
வித்தியாசமான புத்துணர்ச்சியான படத்தை விரும்பினால் ரன் லோலா ரன் சரியான தேர்வாக இருக்கும்.