திம்பம் மலைப் பாதையில் அனுமன் மந்தி அதிகரிப்பு!

Webdunia

திங்கள், 3 செப்டம்பர் 2007 (13:53 IST)
சத்தியமங்கலம் மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாக அனுமன் மந்தி வகையை சேர்ந்த குரங்குகள் அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரியில் இருந்து தொடங்குகிறது திம்பம் மலைப்பாதை. மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த பாதையின் உச்சியில் திம்பம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரம் கொண்ட பகுதியாகும்.

இதையடுத்து ஆசனூர், தாளவாடி மற்றும் தலைமலை வனப்பகுதிகள் உள்ளது. திம்பம் மலைப்பாதையில் பேருந்து செல்லும்போது பயணிகள் சாலையின் இருபக்கத்திலும் ஏதாவது விலங்குகள் தென்படுகிறாதா என்று ஆர்வத்துடன் பார்த்து செல்வார்கள். அப்போது பெரும்பாலும் மான் கூட்டம் தென்படும்.
சில சமங்களில் யானை, காட்டெருமை மற்றும் சிறுத்தை போன்ற வனவிலங்குகளும் தரிசனம் தருவது உண்டு.

ஆனால் கொண்டை ஊசி வளைவில் கட்டாயம் குரங்கு கூட்டங்கள் அதிகமாக காணப்படும். நாள்தோறும் இந்த வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் போன்ற திண்பண்டங்கள் வாங்கிப் போடுவது வழக்கம்.

webdunia photoWD
கடந்த சில மாதங்களாக இந்த வழியாக அனுமன் மந்தி என்ற அரிய வகை குரங்குகள் அதிகமாக காணப்படுகிறது. அனுமானின் மறு உருவம் என்ற ஐதீகப்படி இதை அனுமன் மந்தி என்று வனத்துறையில் பெயர் வைத்துள்ளனர். இதை காமன் லங்கூர் என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இது வெள்ளை நிறத்தில், முகம் மட்டும் கருப்பாக வால் நீலமாக காணப்படும்.

இந்த அரியவகை குரங்குகள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே காணப்படும். ஆனால் திம்பம் மலைப்பாதையில் தற்போது சில இடங்களில் சாதாரணமாக இந்த அனுமன் மந்தி காணப்படுகிறது. சாதாரண குரங்குகளை விட இதற்கு பயம் அதிகம் என்பதால் மனிதனை கண்டால் தாவி மரத்தின் உச்சிக்கு சென்று அமர்ந்து கொள்வது இதன் இயல்பாகும்.

தற்போது திம்பம் மலைப்பாதையில் செல்லும் பயணிகளுக்கு இந்த அனுமன் மந்தி கட்டாயம் காட்சி தருவதால் சுற்றுலா மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலர் இதன் அருகே நின்று இந்த அனுமன் மந்தியை பார்த்து வணங்கி செல்வதும் குறிப்பிடதக்கதாகும்.