குறைந்த வட்டியில் கடன்: ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (10:42 IST)
webdunia photo
WD
விவசாயத்திற்கு வழங்குவது போல் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகினfறது. அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிப்ரவரி 29 ஆம் தேதி சமர்பிக்க உள்ள பட்ஜெட்டில் பல சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்கும் வரியை 5 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இவை ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி குறைந்ததால் ஏற்பட்ட இழப்பையும், வட்டி அதிகரித்த காரணத்தினால் ஏற்பட்ட கூடுதல் செலவையும் ஈடு செய்யும் விதத்தில் இல்லை.
எனவே அரசு விவசாய துறைக்கு வழங்குவது போல், ஏற்றுமதியாளர்களுக்கும் ஏழு விழுக்காடு வட்டியில் கடன் வழங்க வேண்டும். அத்துடன் தேவையான கடன் கிடைக்க செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்ட போதும், ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த சங்கம் சமர்பித்துள்ள கோரிக்கை மனுவில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் சேர்மன் சி.ரங்கராஜன், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறது. இதனால் சர்வதேச ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்கு குறையும். பல பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறைவதுடன், அதன் அளவும் குறையும் என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80 வது பிரிவின் கீழ் முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இத்துடன் ஏற்றுமதி சரக்கை விரைவாக அனுப்பும் வகையில் துறைமுகங்களில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்க உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுங்க துறையில் உடனடியாக அனுமதி கிடைப்பதுடன், இதற்கான கட்டணங்களையும் குறைக்க வேண்டும்.
அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்காக ஏற்றுமதியாளர்கள் சொந்தமாக மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உண்டாகிறது. மின் உற்பத்திக்கு தேவையான ஜெனரேட்டர்களுக்கு உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஏற்றுமதி தொடர்பான எல்லா நடவடிக்கைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இப்போது வரியை முதலில் செலுத்தி விட்டு, அதை திரும்ப பெறுவதில் பல சிரமங்கள் இருப்பதுடன், கால தாமதமும் ஏற்படுகிறது.
மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. இந்த வரிகள் மொத்த ஏற்றுமதி சரக்கின் மதிப்பில் ஆறு விழுக்காடாக இருக்கின்றது. மாநில அரசு விதிக்கும் வரிகளை திரும்ப வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்றுமதி ஆடை தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள், துணி, மற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இவைகளுக்கு தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும்.
webdunia photo
WD
ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் எந்த பகுதியில் அமைந்து இருந்தாலும், அவற்றை 100 விழுக்காடு ஏற்றுமதி நிறுவனமாக கருதி, வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரீந்தர் ஆனந்த் கூறுகையில், சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு வழங்கப்படும் கடன், ஏற்றுமதி செய்த பிறகு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை மேலும் இரண்டு விழுக்காடு குறைக்க வேண்டும. இந்த கடன் திருப்பி கட்டுவதற்கான காலத்தை 360 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று கூறினார்.