பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் - மான்டேக் சிங் அலுவாலியா!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:16 IST)
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரும் வெள்ளிக் கிழமை பட்ஜெட் சமர்பிக்கப்பட உள்ளது. இதில் சமூக நலவாழ்வுக்கான நிதி அதிக அளவில் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பட்ஜெட் சமர்பிக்க நான்கு நாட்கள் உள்ள நிலையில் அலுவாலியா பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கூறியிருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.
நாம் பல்வேறு ஆற்றல்களையும் பயன்படுத்தும் வகையில், ஒருங்கினைந்த ஆற்றல் கொள்கைகள் பற்றி கூறி வருகின்றோம். பெட்ரோலிய பொருட்களின் மீது குறைந்த அளவு வரி விதிக்கும் கொள்கையை பற்றி முடிவெடுக்க வேண்டும். வரியை குறைப்பது என முடிவு எடுத்து விட்டால், பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பை குறிப்பிட்ட காலத்திற்கு திரும்ப கிடைக்காது.
அதே நேரத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை உயர்வை, பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துபவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் ஏற்கனவே விலை உயர்வு என்ற சுமையை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இல்லையெனில் பெட்ரோலிய நிறுவனங்கள் என்றோ திவாலாகி இருக்கும். அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் நலிவடைய விரும்பாது என்று நினைக்கின்றேன் என்று கூறினார்.
பட்ஜெட்டில் சமூக நல துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா என்று கேட்டதற்கு அலுவாலியா பதிலளிக்கையில், நிச்சயமாக அதிக நிதி ஒதுக்கப்படும். பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை நீங்கள் உணரலாம் என்று கூறினார்.