எம்.ஜி.ஆர் விழாவை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்....

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (13:51 IST)
இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால், கிரீன்வேஸ் ஆலை மற்றும் நந்தனம் சாலை என அனைத்து இடத்திலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 
இந்நிலையில், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். 
 
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட; எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த தலைவர் கலைஞர் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும், கலைஞர் பெரிதும் நெருக்கமாக நேசித்த இயக்கத்தினரான உடன்பிறப்புகளையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதலமைச்சரில் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள். 
 
முதலமைச்சர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மாண்புமிகு மக்களவை துணைச் சபாநாயகர் அவர்களுக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான முறையில் - உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். 
 
அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை. 
 
அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன். 
 
என அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்