ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு : அண்ணாசாலையில் வலுக்கும் போரட்டம்

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (18:15 IST)
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசலை பகுதியில் போராட்டம் வலுத்துள்ளது.  

 
காவிரி விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதிர்ப்புகளை மீறி, கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியினரை சேர்ந்தவர்கள்  அண்ணாசாலை,  திருவல்லிக்கேனி வழியாக பேரணியாக சென்று சேப்பாக் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
 
அதன் பின்பு, இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, எஸ்.டி.பி.ஐ, ரஜினி மக்கள் மன்றம், நாம் தமிழர் கட்சி, மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு அமைப்பினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் குதித்தனர். அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக சேப்பாக் மைதானத்தை முற்றுகையிட சென்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த களோபரத்தில், விளையாட்டை பார்க்க வந்தவர்கள் யார்? போராட்டக்காரர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்