விஜயகாந்தை வீழ்த்தியே தீருவேன்: பாமக வேட்பாளரின் சபதம்

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:58 IST)
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது நமக்கு தெரிந்ததே.



 


இதனையடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த தொகுதியில் ஒவ்வொரு கட்சிகளும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. விஜயகாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பாமக தனது வேட்பாளரை மாற்றியது. முதலில் அறிவிக்கப்பட்ட ராமமூர்த்தியை வாபஸ் பெற்று பாலுவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் பாலு.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜயகாந்துக்கு வலுவான போட்டி கொடுக்க வேண்டும் என்ற வகையிலும் என்னை கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளார்கள். விஜயகாந்த் தான் வெற்றி பெறுவதைவிட பாமகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறார்.

இதுவரை வெற்றி பெற்ற இரு தொகுதிகளிலும் அவருடைய செயல்பாடு ஜீரோவாக இருந்தது. பின்னர் எப்படி உளுந்தூர் பேட்டையில் மட்டும் நன்றாக செயல்படுவார். இதனை மக்களிடம் எடுத்துகூறி வாக்குகள் சேகரிப்பேன். விஜயகாந்தின் செல்வாக்கு கடந்த தேர்தலில் சரிவை சந்தித்தது என்பது உறுதியானது. அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. இந்த தொகுதியில் அவரை நிச்சயம் நான் வீழ்த்தி காட்டுவேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்